மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

கார் விற்பனையில் அசத்தும் மாருதி சுசுகி!

கார் விற்பனையில் அசத்தும் மாருதி சுசுகி!

கடந்த 2016-17 நிதியாண்டில் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஏழு மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் அதிகமாக விற்பனையாகும் முதல் 10 மாடல்களின் (கார்) பட்டியலை இந்திய மோட்டார் வாகனத் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், 2016-17 நிதியாண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மாருதி சுசுகி நிறுவனத்தின், ஆல்டோ கார் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இக்கார்களின் விற்பனை முந்தைய நிதியாண்டைவிட 8.27 சதவிகிதம் குறைந்து, 2,63,422லிருந்து, 2,41,635 ஆக சரிவடைந்துள்ளது. எனினும் தொடர்ந்து, 13வது ஆண்டாக ஆல்டோ மாடல் கார் விற்பனையில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

மாருதி சுசுகி நிறுவனத்தின், வேகன் - ஆர் மாடல் (1,72,346 கார்கள்) இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டில் ஆல்டோ கார் நான்காவது இடத்தில் இருந்தது. மாருதி சுசுகி டிசையர் மாடல் (1,67,266 கார்கள்) மூன்றாவது இடத்திலும், மாருதி சுசுகி ஸ்விப்ட் மாடல் (1,66,885 கார்கள்) நான்காவது இடத்திலும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின், கிராண்ட் ஐ-10 (1,46,228 கார்கள்) மற்றும் எலைட் ஐ-20 (1,26,304 கார்கள்) ஆகிய மாடல் கார்கள் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளன. இந்த வரிசையில், மாருதி சுசுகியின், பலேனோ மாடல் (1,20,304 கார்கள்) ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில், எட்டாவது இடத்தை ரினால்ட் இந்தியா நிறுவனத்தின், க்விட் மாடல் (1,09,341 கார்கள்) பிடித்துள்ளது.

மாருதி சுசுகி நிறுவனத்தின், விட்டாரா பிரேஸா (1,08,640 கார்கள்) மற்றும் செலிரியோ மாடல் (97,361 கார்கள்) முறையே ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளன. கடந்த 2015-16 நிதியாண்டில் இப்பட்டியலில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆறு மாடல்கள் இடம்பெற்றிருந்த நிலையில், இந்த நிதியாண்டில் ஏழு மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon