மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

சாதி பாகுபாடால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!

சாதி பாகுபாடால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!

ஹரியானாவில் சாதி பாகுபாடு காரணமாக இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனத்தில் பொருட்களை ஏற்றிச்செல்லும் தொழில் செய்துவந்த ஹரியான மாநிலம், சோனிபட் நகரைச் சேர்ந்த விஜயகுமார் என்ற இளைஞர் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆனால் விஜயகுமார் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு அவர் தன்னுடைய செல்போனில் தற்கொலைக்கு என்ன காரணம் என்று வீடியோ பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், “எனது கிராமத்தைச் சேர்ந்த உயர்சாதியைச் சேர்ந்த 3 பேர் எனக்கு தொடர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தொந்தரவு கொடுத்துவந்தனர். அவர்கள் எனது பெயரையும் எனது தந்தையின் பெயரையும் மாற்றிக்கொள்ளும்படி கூறினார்கள். அப்படி நாங்கள் பெயரை மாற்றிக்கொள்ளாவிட்டால், கிராமத்திலிருந்து விரட்டிவிடுவோம் என்று மிரட்டினார்கள். நான் எனது சுயமரியாதையை இழந்துவிட்டேன். எனது குழந்தைகள் முகத்தில் எப்படி விழிப்பேன்? அதனால், என் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன்” என்று பேசி பதிவு செய்துள்ளார்.

விஜயகுமாரின் மரணம் குறித்து அவருடைய தந்தை ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ‘நாங்கள் சாதிரீதியாக தாக்குதலுக்குள்ளாவது இது முதல்முறை அல்ல. எனது சிறிய கடைகூட அவர்களது தூண்டுதலால்தான் மூடப்பட்டது. அவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நான் முட்டை விற்றதற்காக துன்புறுத்தப்பட்டேன். அதன்பிறகு, நான் எனது தொழிலையே மாற்றிக்கொண்டேன். எனது மகனின் மரணத்தால், தற்போது குடும்பத்திலுள்ள 17 பேர்களையும் பராமரிக்கும் பொறுப்பு என் மீது விழுந்துள்ளது’ என்று கூறியுள்ளார்.

விஜயகுமாரின் தற்கொலைக்கு காரணமாக சொல்லப்பட்ட சோனிபட் கிராமத்தைச் சேர்ந்த 3 பேர்களும் கடந்த திங்கள்கிழமை இரவு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில், சாதி பாகுபாடு காரணமாக பாதிக்கப்படும் இளைஞர்களின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலா, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவர் முத்துகிருஷ்ணன் இருவரும் கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதி பாகுபாடு காரணமாக தற்கொலை செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon