மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

சிதறிய பீர் பாட்டில்கள் : அள்ளிச் சென்ற பொதுமக்கள்!

சிதறிய பீர் பாட்டில்கள் : அள்ளிச் சென்ற பொதுமக்கள்!

விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான நிறுவனத்தில் இருந்து பீர் ஏற்றிச்சென்ற லாரி நெடுஞ்சாலையில் கவிழ்ந்த சம்பவம் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா, பெங்களூருவை அடுத்துள்ள நெலமங்களாவில் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர், யூபி பீர் நிறுவனம் உள்ளது. நேற்று (ஏப்ரல், 19) அங்கிருந்து பீர் பாட்டில்கள் ஏற்றிக்கொண்ட லாரி ஒன்று ஹாசன் நகருக்குச் சென்றுகொண்டிருந்தது.

இந்நிலையில், தும்கூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி சாலையோர தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியில் இருந்த‌ பெட்டிகள் உடைந்து அதில் இருந்த பீர் சாலையில் ஆறாக ஓடியது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள், லாரியில் இருந்தவர்களை மீட்காமல் உடையாமல் இருந்த பீர் பாட்டில்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் சிலர் நண்பர்களுக்கு செல்பேசி மூலம் தகவல் தெரிவித்து, பீர் பாட்டில்களை அள்ளிக் கொண்டிருந்தனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தும்கூர் போக்குவரத்து போலீஸார், பொதுமக்களை அங்கிருந்து விரட்டினர். கவிழ்ந்த லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோர் காயமின்றி தப்பினர். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பீர் பாட்டில்கள் வீணாகப் போனது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு, லக்னோவில் இருந்து டெல்லி செல்லும் சாலையில் பீர் பாட்டில்களை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது லாரியிலிருந்து சிதறிக் கிடந்த பீர் பாட்டில்களை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon