மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

அதிபருக்கு எதிரான போராட்டம் : இருவர் பலி!

அதிபருக்கு எதிரான போராட்டம் : இருவர் பலி!

வெனிசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மடுரோக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட கடும் மோதலால் இரண்டு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பெட்ரோல் உற்பத்தியில் உலகில் முன்னணி நாடுகளில் ஒன்றாக இருக்கும் வெனிசுலா நாடு, தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ளது. இந்த நாட்டில் நீண்டகாலமாக ரபேல் சாவஸ் அதிபராக இருந்து வந்தார். நாட்டின் மிகப்பெரிய தலைவராக திகழ்ந்துவந்த அவர், 2013ஆம் ஆண்டு நோயினால் மரணம் அடைந்தார். அவர் ஆட்சியில் இருந்தவரை நாட்டில் அமைதி நிலவி வந்தது.

அவர் மரணம் அடைந்ததும் நிக்கோலஸ் மடுரோ அதிபர் ஆனார். ஆனால் அவரால் ஆட்சியை சரியாக நடத்த முடியவில்லை. எண்ணை வளம் மிக்க நாடாக இருந்தாலும் பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்தது. பணவீக்கம் பல மடங்கு அதிகரித்தது.

எனவே, மக்கள் பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை. விலைவாசி கட்டுப்பாடற்ற நிலையில் உள்ளது என்று தெரிவித்து, அதிபருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தில் கலந்துகொண்ட பல தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், புதன்கிழமையன்று (நேற்று) நாடு முழுவதும் அதிபருக்கு எதிராக மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.

அதிபர் பதவி விலக வேண்டும், உடனடியாக அதிபர் தேர்தல் நடத்த வேண்டும், ஜெயிலில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தினர்.

தலைநகரில் மக்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். கராகஸ் மற்றும் சான் கிறிஸ்டோபல் நகரில் துப்பாக்கிச் சூடு நடந்தது. கராகஸ் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் வாலிபர் ஒருவர் பலியானார். சான் கிறிஸ்டோபலில் பெண் ஒருவர் பலியானார்.

இதனால் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸ் வாகனம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர்ப் புகை குண்டை வீசியும் போராட்டத்தை கலைத்தனர். அப்போது சாலைகளில் உள்ள வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் அந்தப் பகுதி போர்க்களமாக காட்சி அளித்தது.

இவர்களின் இந்தப் போராட்டம் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை இன்றும் நீடித்து வருகிறது. இதனால் வெனிசுலாவில் எங்கு பார்த்தாலும் கலவர சூழ்நிலை நிலவுகிறது.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon