மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

ஐ.பி.எல். 2017 : பெஸ்ட் vs வொர்ஸ்ட் எதில்?

ஐ.பி.எல். 2017 : பெஸ்ட் vs வொர்ஸ்ட் எதில்?

ஐ.பி.எல். தொடரின் இந்தூரில் நடைபெறவிருக்கும் இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் அணி 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் 5 ஆவது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி முதல் இரண்டு ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றது. ஆனால் அதன்பின்னர் தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து 3வது வெற்றிபெறும் ஆர்வத்தில் பஞ்சாப் அணி விளையாடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். பஞ்சாப் அணியில் இடம்பெறாமல் இருக்கும் சிறந்த வீரர்களான மோர்கன், மார்டின் குப்டில் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை அணி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 3வது இடத்தில் உள்ளது. முதல் போட்டியில் மட்டுமே தோல்வியடைந்த மும்பை அணி, தொடர்ந்து 4 போட்டிகளையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கேப்டன் ரோகித் சர்மா, நித்திஷ் ரானா, ஹர்த்திக் பாண்டியா, பொல்லார்ட், மலிங்கா போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அதிரடியைச் சமாளிப்பது பஞ்சாப் அணிக்கு பெரும் சவாலான ஒன்றே. காரணம், இந்த வருடம் ஐ.பி.எல். தொடரில் கடைசி 5 ஓவர்களில் அதிக ரன்கள் சேர்த்த அணிகளில் மும்பை அணி முதலிடத்திலும், பஞ்சாப் அணி கடைசி இடத்திலும் உள்ளன. இதுவரை மலிங்கா பஞ்சாப் அணியுடன் 11 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி, இன்னும் ஒரு விக்கெட்டை கைப்பற்றினால் ஹர்பஜன் சிங் டி-20 போட்டிகளில் மொத்தம் 200 விக்கெட்டுகளை கைப்பற்றுவார்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon