மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

நஞ்சாக்கப்படும் பழங்கள் : உணவு பாதுகாப்புத் துறை!

நஞ்சாக்கப்படும் பழங்கள் : உணவு பாதுகாப்புத் துறை!

கோடைகாலத்தில், எப்போதும் பழங்களுக்கான தேவை அதிகரிக்கும். எனவே, பழங்களை விரைவாக பழுக்கவைக்க செயற்கை முறையில் கால்சியம் கார்பைடு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆர்செனிக் மற்றும் பாஸ்பரஸ் இருப்பதால் உடநலத்துக்கு கேடு விளைவிக்கும். புற்றுநோய் செல்களை உருவாக்கும்

இந்நிலையில், செயற்கை முறையில் பழங்களை பழுக்கவைப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பழ வியாபாரிகள் சங்கங்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மூத்த சுகாதார அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து, மூத்த சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர், ’பழங்களை விரைவாக பழுக்கவைக்க கால்சியம் கார்பைடு பயன்படுத்தப்படுகிறது. இனி, செயற்கை முறையில் பழங்களை பழுக்கவைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்தார்.

கடந்த மாதம், சென்னை கோயம்பேட்டில் சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம், சப்போட்டா, பப்பாளி உள்ளிட்ட 4,000 கிலோ பழங்களை பறிமுதல் செய்தனர். மேலும் பழங்களை பழுக்கவைக்க பயன்படுத்தப்பட்ட 75 கிலோ கால்சியம் கார்பைடு கற்களையும் பறிமுதல் செய்தனர்.

இதன் ஆபத்து தெரிந்திருந்தும் இதை வியாபாரிகள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர் என சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் அதிகாரி கே.கதிரவன் தெரிவித்துள்ளார்.

கால்சியம் கார்பைடு பயன்படுத்துவதால் சிறுநீரகம், கல்லீரல் மற்றும் இரைப்பை கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. பழங்களோடு பழங்களாக கால்சியம் கார்பைடு கற்களை வைப்பதன்மூலம் பழங்களை பழுக்க வைக்கச் செய்கின்றனர். கால்சியம் கார்பைடு பயன்படுத்த உணவு ஒழுங்குபடுத்துதல் தடுப்புச் சட்டம் 44ஏ-ன் படி தடை விதிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான வியாபாரிகள் தடையை மீறி பயன்படுத்துகின்றனர். இனி, தடையை மீறி கால்சியம் கார்பைடு பயன்படுத்தினால் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை சட்டம் 2006, 57ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும் பழ வியாபாரிகள் செயற்கை முறையில் பழங்களை பழுக்கவைத்தால் 044-23813095 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் தடைசெய்யப்பட்ட கால்சியம் கார்பைடு மிக சாதாரணமாக சந்தைகளில் விற்கப்படுகிறது. பெரும்பாலும் வாழைப்பழம், தர்பூசணி, மாம்பழம் போன்ற பழங்களில் இந்த இரசாயனத்தை பயன்படுத்துகின்றனர்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon