மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

மாம்பழ ஏற்றுமதியில் இந்தியா சாதனை!

மாம்பழ ஏற்றுமதியில் இந்தியா சாதனை!

உலகம் முழுவதிலுமிருந்து இந்தியாவில் விளையும் அல்போன்சா வகை மாம்பழங்களுக்கு எப்போதுமே அதிக வரவேற்பும் தேவையும் நிலவிவருகிறது. இதன் காரணமாக, இந்த வகை மாம்பழங்கள் இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலிருந்து அதிகளவில் அல்போன்சா மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படும் நாடு ஜப்பான்.

இந்நிலையில், ஜப்பானுக்கு இந்தியா அல்போன்சா வகை மாம்பழங்களை வெற்றிகரமாக 10 ஆண்டுகளாக ஏற்றுமதி செய்து மாம்பழ ஏற்றுமதியில் புதிய மைல்கல்லை பதித்துள்ளது என்று மகாராஷ்டிரா வேளாண் சந்தை வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் ஏற்கெனவே நடப்பு பருவத்துக்கான மாம்பழங்கள் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவிட்டதாகவும், அடுத்த பருவத்தில் ஜப்பானிலிருந்து அதிகளவில் ஆர்டர் வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வேளாண் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மகாராஷ்டிர வேளாண் சந்தை வாரியத்தின் நிர்வாக இயக்குநர் கிஷோர் டோஷ்நிவால் கூறுகையில், ‘மாம்பழ ஏற்றுமதியில் மிகவும் கடினமான சந்தையாக ஜப்பான் திகழ்கிறது. மேலும் மாம்பழ ஏற்றுமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிமுறைகளையும் ஜப்பான் விதித்துள்ளது. இருப்பினும், அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடித்து இந்தியா வெற்றிகரமாக ஜப்பானுக்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்து வெற்றிபெற்றுள்ளது’ என்றார். சென்ற வருடம் மட்டும் இந்தியா ஜப்பானுக்கு 50 டன் மாம்பழங்களை ஏற்றுமதி செய்திருந்த நிலையில், இந்த வருடம் ஜப்பானுக்கு 150 டன் மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon