மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

பாகிஸ்தான் ஆடைகளா? எம்.என்.எஸ். எச்சரிக்கை!

பாகிஸ்தான் ஆடைகளா? எம்.என்.எஸ். எச்சரிக்கை!

பாகிஸ்தானின் ஆடைகளை இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதி கிடையாது என, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய முன்னாள் கடற்படை வீரர் குல்பூஷன் ஜாதவை 'ரா' அமைப்பின் உளவாளி என குற்றம்சாட்டி கைது செய்த பாகிஸ்தான் அவருக்கு தூக்கு தண்டனை அளித்தது. இந்தியாவின் தரப்பில் பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மத்திய அரசு பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்திவைத்தது.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல்,18) மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியினர் மும்பை பல்லடியம் மால் லோயர் பரேல் பகுதியில் இயங்கிவரும் ஜாரா ஆடை விற்பனை மையத்துக்குச் சென்றபோது, பாகிஸ்தான் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகள் விற்பனை செய்யப்பட்டு வந்ததைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, அதற்கு கண்டனம் தெரிவித்த ரிதா குப்தா தலைமையிலான மாணவர்கள், ஷோரூம் பிரிவு மூடப்பட வேண்டும் என்றும் பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளை மும்பையில் விற்பனை செய்யக் கூடாது எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மீறி விற்பனை செய்யும் கடை மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து ரிதா குப்தா, ‘குல்பூஷன் ஜாதவை உளவாளி என குற்றம்சாட்டி பாகிஸ்தானில் தூக்கு தண்டனை அளித்துள்ளனர். ஆனால் இங்கு பாகிஸ்தானின் ஆடைகளை விற்க அனுமதியளித்துள்ளனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஷோரூமை மூடவில்லை என்றால் தாக்குதல் நடத்துவோம்’ என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் 19 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்தனர். அப்போது, அதற்கு கடும் கண்டனம் தெரிவித்த மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியினர், பாகிஸ்தான் கலைஞர்கள் இந்தியாவைவிட்டு 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon