மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

மெட்ரோ பணி:குடியிருப்புப் பகுதியில் வெளியேறிய ரசாயனக் கலவை

மெட்ரோ பணி:குடியிருப்புப் பகுதியில் வெளியேறிய ரசாயனக் கலவை

வண்ணாரப்பேட்டை அருகே மீண்டும் இன்று ஏப்ரல் 20ஆம் தேதி பூமிக்கு அடியிலிருந்து ரசாயனக் கலவை வெளியேறியுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டையிலிருந்து பாரிமுனை, சென்ட்ரல், எல்ஐசி, ஆயிரம்விளக்கு, தேனாம்பேட்டை, நந்தனம் வழியாக சைதாப்பேட்டை வரை சுரங்க வழித்தடங்களில் ரயிலை இயக்குவதற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த மெட்ரோ பணிகளால் சாலைகளில் பள்ளம் விழுவதும், ரசாயனக் கலவை வெளியேறுவதுமாக உள்ளது. இதுபோன்று வெளியேறும் ரசாயனக் கலவைகளால் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். தற்போது வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் விம்கோ வரை மெட்ரோ ரெயில் வழித்தடத்துக்காக சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளால் வண்ணாரப்பேட்டை அருகே கிழக்கு மேஸ்திரி தெருவைச் சேர்ந்த முகமது யூசுப் என்பவரது வீட்டுக்குமுன்பாக ரசாயனக் கலவை பீய்ச்சியடித்து வெளியேறியுள்ளது.

இதனால் அச்சமடைந்த மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மெட்ரோ ரயில் சேவை ஊழியர்கள் ரசாயனக் கலவையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தற்போது இரண்டாவது முறையாக இந்தப் பகுதியில் ரசாயனக் கலவை வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த மெட்ரோ பணிகளால் அண்ணா சாலை, பாண்டி பஜார், ஆயிரம்விளக்கு, ஸ்டான்லி மருத்துவமனை அருகே அடிக்கடி பள்ளம் ஏற்படுவதும் அதை மெட்ரோ பணியாளர்கள் சீர் செய்வதும் தொடர்கதையாகிவருவது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon