மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

இந்தியாவுக்கு வருவாரா விஜய் மல்லையா?

இந்தியாவுக்கு வருவாரா விஜய் மல்லையா?

பல ஆயிரம் கோடி ரூபாயை வங்கிகளிலிருந்து கடன் பெற்று, அதை திரும்பச் செலுத்தமுடியாமல் இந்தியாவை விட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. இவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று இந்திய அரசு, இங்கிலாந்து அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியன்று லண்டனில் கைது செய்யப்பட்ட மல்லையா, மூன்று மணி நேரத்தில் ஜாமீன் பெற்றுவிட்டார்.

இந்நிலையில், விஜய் மல்லையா இந்தியா வருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா? இந்தியாவுக்கு விஜய் மல்லையா எப்போது வருவார்? என்பன போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இந்தியாவைச் சேர்ந்த ஒருவர், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் வழக்குகளுக்கும் உள்ளாகி, இங்கிலாந்துக்குச் சென்றவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கை இது முதன்முறையல்ல.

லலித் மோடி, ஐ.பி.எல். அணிகள் உரிமை வழங்குவதில் நிதி மோசடிகளில் ஈடுபட்டு பின்னர் லண்டனுக்குச் சென்றவர். இவரை இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று இங்கிலாந்து அரசாங்கத்துக்கு இந்தியா பலமுறை கோரிக்கை வைத்துள்ளது.

ரவி சங்கரன், இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் மிகப் பாதுகாப்பான ’வார்’ ரூமில் இருந்து ராணுவ ரகசிய ஆவணங்களை வெளிநாட்டு ஆயுத காண்ட்ராக்டருக்கு கசியவிட முயன்றவர். இவர்மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. ஆனால் இவர் லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

நதீம் சைபி, குல்ஷன் குமார் கொலை வழக்கில் சிக்கிய இந்திய இசையமைப்பாளர். இந்த வழக்கிலிருந்து தப்பிக்க லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

டைகர் ஹனிஃப், பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு குஜராத்தில், கடந்த 1993ஆம் ஆண்டு ஏற்பட்ட இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர். இவரை இந்தியா கொண்டுவர இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் இன்னும் அவர் லண்டனிலேயே உள்ளார்.

இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்குமிடையே 1992ஆம் ஆண்டு முதல் கைதிகளை நாடு கடத்த ஒப்பந்தம் உள்ளது. ஆனால் அந்த ஒப்பந்தத்தின்கீழ் குஜராத் கலவர வழக்கில் தொடர்புடைய சமிர்பாய் வினுபாய் பட்டேல் என்பவர் மட்டும்தான் இங்கிலாந்தால் நாடு கடத்தப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மல்லையா தன்மீது சுமத்தப்பட்ட வழக்கை அவர், தற்போது சட்டப்படி அணுகினால்கூட அந்த வழக்கு முடிய பல மாதங்கள் ஏன், பல வருடங்கள்கூட ஆகலாம் என்றே தெரிகிறது. எனவே, விஜய் மல்லையா உடனடியாக இந்தியாவுக்கு அழைத்துவரப்படும் சாத்தியக் கூறுகள் குறைவாகவே உள்ளது என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.

மேலும் கடந்த காலங்களில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டவரை இந்தியாவுக்கு கொண்டு வர முடியாததற்கு முக்கியக் காரணம், லண்டன் நீதிமன்றங்களில் இந்திய அரசானது போதிய ஆவணங்களை சமர்ப்பிக்காததே ஆகும். எனவே, விஜய் மல்லையா வழக்கில் நீதிமன்றங்களில் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதில் அதிக கவனத்தை இந்தியா மேற்கொண்டு வருவதாக வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். பல்வேறு வழக்குகளில் உலக நாடுகளால் தேடப்பட்டுவரும் பல்வேறு குற்றவாளிகளுக்கு அடைக்கலம் வழங்கும் நாடாக இங்கிலாந்து திகழ்கிறது.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon