மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

முதன்முறையாக காக்கைகளுக்காக உணவகம்!

முதன்முறையாக காக்கைகளுக்காக உணவகம்!

உலகிலேயே முதன்முறையாக லண்டனில் காக்கைகளுக்காக உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் உள்ள மக்களின் பண்பாட்டில் காகத்துக்கு ஓர் இடமுண்டு. காகம் கரைந்தால் வீட்டுக்கு விருந்தாளிகள் வருவர் என்பது தமிழர் நம்பிக்கை ஆகும். அதுபோன்று, ஆஸ்திரேலியாவில் காக்கைகள் கலாச்சாரத்தின் சின்னமாகவும், மூதாதையர்களாகவும் கருதப்படுகிறது. காகம், தான் உண்ணும் பழங்களின் கொட்டைகளை மற்ற இடங்களில் எச்சமாகப் போடுவதால் வேம்பு, ஆல், அத்தி, அரசமரம் போன்ற மரங்கள் அதிகளவில் வளர்கின்றன.

ஆனால் சில ஆண்டுகளாக காக்கையின் சில இனங்கள் அழிந்து வருகின்றன. முக்கியமாக ஹவாயன், மரியனா போன்ற காக்கை இனங்கள் அழிவின் விழிம்பில் உள்ளதாக அமெரிக்க மீன் மற்றும் வன உயிரினங்கள் சேவை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், காகம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும்வகையில் லண்டனில் காகங்கள் உணவருந்த உணவகம் திறக்கப்பட்டுள்ளது. லண்டனைச் சேர்ந்த சார்லஸ் கில்மோர் (61) என்பவர் காகங்களின் மீது மிகுந்த அன்பு கொண்டவர். இதன் காரணமாக, காகங்கள் உணவருந்துவதற்காக உணவகம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

அதில், காகங்களின் உணவான புழுக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகள் வைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களை வரவேற்கும்வகையில் வரவேற்பறையில் நிஜ காகமும் வைக்கப்பட்டுள்ளது‌. மேலும் அந்த உணவகத்தை வேடிக்கை பார்க்கவரும் பொதுமக்களுக்கு காகம் வடிவிலான பிஸ்கெட்டை செய்து கொடுத்து வருகிறார். மனிதர்கள் உணவருந்த விதவிதமான ஓட்டல்கள் உள்ள நிலையில், காகங்களுக்கு முதன்முறையாக லண்டனில் உணவகம் திறக்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon