மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

ஐ.பி.எல். 2017 : வாய்ப்பை பயன்படுத்திய வில்லியம்சன்!

ஐ.பி.எல். 2017 : வாய்ப்பை பயன்படுத்திய வில்லியம்சன்!

ஐ.பி.எல். சீசன் 10-ன் 21வது லீக் ஆட்டம் ஹைதராபாத்தில் நேற்றிரவு 8 மணிக்குத் தொடங்கியது. இந்தப் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றது. முன்னதாக, டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, தொடக்க வீரர்களாக கேப்டன் வார்னர் - தவான் களமிறங்கினர். எப்போதும் சிறப்பாக விளையாடும் ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் 7 பந்துகளில் 4 ரன்கள் எடுத்திருந்தபோது கிறிஸ் மோரிஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, தொடக்க வீரர் தவானுடன் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். கடந்த ஐ.பி.எல். தொடரில் ஹைதராபாத் அணியால் ஏலம் பெறப்பட்ட வில்லியம்சன், சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார். இருப்பினும் அவருக்கு இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் நேற்றைய போட்டியில் முதலாவதாக வழங்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தினார் வில்லியம்சன். அவர் 51 பந்துகளில் 89 ரன்களைச் சேர்த்தார். அவருடன் சேர்ந்து சிறப்பாக விளையாடிய தவான் 50 பந்துகளில் 70 ரன்களைச் சேர்த்தார். அதன்பின் வந்த வீரர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களைச் சேர்த்தது. டெல்லி சார்பில் மோரிஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக களமிங்கிய சஞ்சு சாம்சன் மற்றும் சாம் பில்லிங்ஸ் தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் சாம் பில்லிங்ஸ் 13 (9) ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கருண் நாயர் சஞ்சு சாம்சனுடன் இணைந்து அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை அதிகரித்தனர். சஞ்சு சாம்சன் 42 (33) ரன்னிலும், நாயர் 33 (23) ரன்னிலும் வெளியேறினார்கள். பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் - மேத்யூஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் இலக்கை நோக்கிச் சென்றது. எனினும் கடைசி ஓவருக்கு 23 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 7 ரன்கள் மட்டுமே சேர்த்தனர் டெல்லி அணியினர். இறுதியில், டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை எடுத்தது. அந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் 50 (31) ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐதராபாத் அணியின் சார்பாக சிராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய கேன் வில்லியம்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon