மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

புத்தர் பிறந்த நாள் : மோடி இலங்கை பயணம்!

புத்தர் பிறந்த நாள் : மோடி இலங்கை பயணம்!

வருகிற மே மாதம் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை, கௌதம புத்தரின் பிறந்த நாளான ‘வேசக்’ தினத்தை முன்னிட்டு ஐ.நா. சபையின் சர்வதேச மாநாடு இலங்கையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என்று இலங்கையின் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள புத்த மதத்தினர், கௌதம புத்தர் பிறந்தநாளை ‘வேசக்’ என்ற புனிதநாளாக கொண்டாடி வருகின்றனர். இலங்கையில் வேசக் தினத்துக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வேசக் தினத்தையொட்டி, சர்வதேச மாநாடு நடத்த ஐ.நா. சபை முடிவுசெய்துள்ளது.

தற்போது, இலங்கையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400 முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டில் கலந்துகொள்ளும் மோடி, மாநாடு முடிந்தபின் யாழ்ப்பாணம் மற்றும் கண்டியை பார்வையிடுகிறார்.

மோடி, இலங்கைக்குச் செல்வது இது இரண்டாவது முறையாகும். இந்தப் பயணத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையே வளர்ச்சி ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon