மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு சம்மன்!

விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு சம்மன்!

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக தினகரனுக்கு சம்மன் அளிக்கப்பட்டது.

கடந்த 17ஆம் தேதி டெல்லியிலுள்ள தனியார் விடுதியில் சுகேஷ் சந்திரா என்பவர் 1.30 கோடி ரூபாய் பணத்துடன் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாக அதிமுக பொதுச்செயலாளர் தினகரன் மீது டெல்லி குற்றவியல் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அவருக்கு சம்மன் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடைபெற்ற அமைச்சர்களின் ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவின்படி தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கிவைக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ‘தான் நேற்றே கட்சியை விட்டு ஒதுங்கிவிட்டதாகத்’ தெரிவித்தார்.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், தினகரனுக்கு சம்மன் அளிக்க ஏப்ரல் 19ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு டெல்லியிலிருந்து விமானத்தில் சென்னைக்கு வந்த டெல்லி குற்றவியல் உதவி கமிஷனர் சஞ்சய் ஷெராவத் தலைமையிலான போலீஸார், இரவு 11 மணியளவில் அடையாறிலுள்ள தினகரனின் இல்லத்தில் அவரைச் சந்தித்து, தாங்கள் கொண்டு வந்த சம்மனை அளித்தனர். அதில், வரும் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் நடைபெறும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் அவரிடம் சுமார் 15 நிமிடங்கள் விசாரணை நடத்திய போலீஸார் அதன்பிறகு புறப்பட்டுச் சென்றனர்.

இதற்கிடையே, தகவலறிந்து தினகரனின் இல்லத்துக்கு முன் அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர். கூட்டத்தில் தினகரனுக்கு ஆதரவாக ரவிச்சந்திரன் என்பவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. எனவே, அவரை போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon