மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

சேகர் ரெட்டி கூட்டாளிகளின் சொத்துகள் முடக்கம்!

சேகர் ரெட்டி கூட்டாளிகளின் சொத்துகள் முடக்கம்!

கறுப்புப்பணப் பதுக்கல் வழக்கில் கைதான தொழிலதிபர் சேகர் ரெட்டியின் கூட்டாளிகளின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி நடைபெற்ற பணமதிப்பழிப்பு விவகாரத்துக்குப் பிறகு நாடு முழுவதும் வருவாய் துறையினர் மற்றும் அமலாக்கத்துறையினர் கடுமையான சோதனைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற சோதனையில் தொழிலதிபர் சேகர் ரெட்டி என்பவரது வீட்டில் இருந்து 147 கோடி ரூபாய் பணமும், 178 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதில், 10 கோடி ரூபாய்க்கும் மேல் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளும் பிடிபட்டன. இதுதொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளான பிரேம்குமார், ஶ்ரீனிவாசலு என்பவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தற்போது சேகர் ரெட்டியின் மற்றொரு கூட்டாளிகளான அசோக் ஜெயின் மற்றும் மஹாவீர் ஜெயின் ஆகியோருக்குச் சொந்தமான 12 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் அமலாக்கத்துறையினரால் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் பரஸ்மல் லோதா மூலம் ரூ.7 கோடி அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றியதை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon