மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

கடம்பன் - ஆர்யாவின் வெற்றிக்கு முதல் படியா?

கடம்பன் - ஆர்யாவின் வெற்றிக்கு முதல் படியா?

‘கடம்பன்’ திரைப்படம் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்’ மற்றும் டி-காப்ரியோவின் ‘ரெவெனண்ட்’ திரைப்படங்களைப் பிரதிபலிப்பதாக இருக்கிறதென டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் எழுதியிருக்கிறார்கள். அது எந்தளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு அந்த மாதிரியான திரைப்படங்கள் இந்தியாவுக்கு, அதிலும் முக்கியமாக தமிழகத்துக்குத் தேவை என்பதும் முக்கியம். ஆனால், ‘கடம்பன்’ எதிர்கொள்ளும் பிரச்னையே வேறு.

வெறும் 14 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இத்தனை சிறந்த VFX காட்சிகள் எடுத்ததே பெரிய விஷயம் என பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறது கோலிவுட். ஆனால், உண்மையில் இந்தத் திரைப்படத்துக்கு முதலில் ஓகே செய்யப்பட்ட பட்ஜெட் ரூ.7 கோடி என்பது பலருக்கும் தெரியாது. ரூ.7 கோடியில் தயாராகியிருக்க வேண்டிய இந்தத் திரைப்படம் கடைசியில் கையில் வந்தபோது 14 கோடி ரூபாயை செலவழித்திருந்தது. படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரித்த ஆர்.பி.சௌத்ரிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக இருந்தாலும் படத்தின் மீதான நம்பிக்கை அதிகமாக இருந்தது.

கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸான கடம்பன் எடுத்த கதையிலும், உருவாக்கப்பட்ட விதத்திலும் இருந்த அளவுக்கு வலிமையாக அதை ரசிகர்களின் கண்முன் வைத்தபோது இல்லை. வழக்கமான சினிமா பாணியில், பொழுதுபோக்கு அம்சங்களை வைத்து ஒரு முக்கியமான செய்தியைப் பேசுகிறார்கள். சீரியஸான படம் என்று ட்ரைலர், பேட்டி என புரமோஷன் செய்துவிட்டு ஹீரோவைத் துரத்தும் ஹீரோயின், படத்திலிருந்து விலகிச்செல்லும் பாடல்கள் என ரசிகர்களின் பொறுமையைச் சோதித்திருந்தார் இயக்குநர். படம் பார்த்தவர்களில் பலர், ‘இவ்வளவு முக்கியமான விஷயத்தை கமர்ஷியலுக்குள்ள வெச்சதுதான் தப்பா இருக்கு’ என ஓப்பனாக பேசிச்சென்றது இதனால்தான்.

‘கடம்பன்’ திரைப்படம், தெலுங்கு திரையுலகத்துக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றதன் அடிப்படையில்தான் கேதரின் தெரசாவைக் கொண்டு வந்திருந்தனர். ஆர்.பி.சௌத்ரிக்கும் தெலுங்கில் நல்ல பெயர் இருந்ததால் ரூ.14 கோடியை பிரச்னையின்றி செலவு செய்தார். ஆனால், கடம்பன் வசூலித்தது எவ்வளவு?

ஓப்பனிங் வீக்-எண்ட் வரை ஒரு நாளுக்கு 171 காட்சிகள் என சென்னையில் மட்டும் ரூ. 48 லட்சத்தை வசூல் செய்தது. மொத்தமாக தமிழகம் முழுவதும் 4 கோடி ரூபாய் பணத்தை ரிட்டர்ன் கொண்டுவந்தது. அதன்பிறகு ஒவ்வொரு நாளும் தோராயமாக ரூ. 70 முதல் 75 லட்சங்கள் வரை வசூல் செய்திருக்கிறது (தியேட்டர் கணக்குப்படி). எப்படிப் பார்த்தாலும் வருகிற வெள்ளிக்கிழமைக்கு முன்பு செலவு செய்த 14 கோடி ரூபாயை கடம்பன் திரும்ப எடுப்பது சந்தேகம்தான். அதன்பிறகு தியேட்டர்களை புதிய படங்கள் ஆட்கொள்ளும்.

தற்போது கோலிவுட்டில் நிலவும் ஒரு ட்ரெண்ட் என்னவென்றால், தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கும் நடிகர்கள் சம்பளத்தில் சிறு தொகையைக் குறைத்துக்கொண்டு திரைப்படத்தின் உரிமையை வாங்கிக்கொள்வார்கள் அல்லது குறிப்பிட்ட இடங்களின் விநியோக உரிமையை வாங்கிக்கொள்வார்கள். அந்த மாதிரி கடம்பன் படத்துக்கான தமிழ் சேட்டிலைட் உரிமையை ஆர்யாவும், தெலுங்கு சேட்டிலைட் உரிமையை ஆர்.பி.சௌத்ரியும் பிரித்துக்கொண்டார்கள். ‘கடம்பன்’ படத்தை எடுத்தவகையில் ஆர்.பி.சௌத்ரிக்கு கிடைத்திருக்கும் ஒரே லாபம் தெலுங்கு சேட்டிலைட் உரிமை மட்டும்தான்.

ஆர்யா இந்தப் படத்துக்கு நிறைய உழைத்திருக்கிறார் என்பது அவரது தோற்றத்தைப் பார்க்கும்போதே தெரிகிறது. நடிப்பில் மட்டுமல்ல, இதுவரை சம்பாதித்த பணத்தையும் இதில் முதலீடு செய்திருக்கிறார். ஆம், கடம்பன் திரைப்படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்ததும் ஆர்யாவின் The Show People நிறுவனம். கடம்பன் திரைப்படத்தின் ட்ரைலரிலேயே இதைக் குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால், படத்தை ரிலீஸ் செய்த பணம் முழுவதுமாக ஆர்யாவுக்கும் வந்து சேரவில்லை. இதற்கு முக்கியக் காரணம் சென்னை போன்ற (இதுவரை ஆர்யா படங்களுக்கு அதிகம் சம்பாதித்துக் கொடுத்த) நகரங்களில் தியேட்டரைப் பிடித்தாரே தவிர, படம் பேசும் பிரச்னையால் பாதித்திருக்கும் மாவட்டங்களில் பலவற்றை விட்டுவிட்டார்கள். ‘கடம்பன்’ படத்துடன் ரிலீஸான ‘பவர் பாண்டி’ திரைப்படம் அந்த தியேட்டர்களை பிடித்துக்கொண்டது. ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் வெற்றிபெற 10 வருடங்கள் தேவைப்பட்ட ஆர்யா, தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் மூன்று வருடங்களையே கடந்த கன்னி தயாரிப்பாளராக இருப்பதால், விரைவில் சரியானவகையில் தனது திரைப்படங்களை தயாரித்து விநியோகம் செய்து வெற்றிபெற வேண்டும்.

- சிவா

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon