மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

சிறப்புக் கட்டுரை: தமிழக விவசாயிகளின் போராட்டம் நியாயமானதா? - ஜெ.ஜெயரஞ்சன்

சிறப்புக் கட்டுரை: தமிழக விவசாயிகளின் போராட்டம் நியாயமானதா? - ஜெ.ஜெயரஞ்சன்

தமிழக விவசாயிகள் பல கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து டெல்லியில் போராடி வருகிறார்கள். நிர்வாணப் போராட்டம்கூட முயற்சித்துவிட்டார்கள். அசைந்து கொடுக்கவில்லை ஒன்றிய அரசு. அவர்களுக்கு வேறு போராட்டத்தில்தானே கவனமெல்லாம். எப்படியாவது தமிழக அரசை தங்களது பொம்மலாட்ட அரசாக மாற்ற முழுநேரத்தையும் திறமையையும் ஆள், அம்பு, சேனை ஆகியவற்றை ஏவி போராடி வருகிறார்கள். விவசாயிகளைப் பார்க்கவோ, அவர்களது கோரிக்கைகளைக் காது கொடுத்துக் கேட்கவோ அவர்களது திட்டமிடலில் எந்த இடமும் இல்லை. ஆகவே, அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. விவசாயிகளும் எலிக்கறி, பாம்புக்கறி, மண்டையோடு, பிச்சையெடுத்தல், மொட்டை போடுதல், தாலி அறுத்தல் என எண்ணற்ற போராட்ட முறைகளை தினம் ஒரு போராட்ட முறை என்று விதவிதமாக போராடிப் பார்க்கிறார்கள். ஆளும் பாஜக வழக்கம்போல் போராட்டத்துக்கு உள்நோக்கம் கற்பித்து கொச்சைப்படுத்தி வருகிறது. தமிழக அரசைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவர்களுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டி 24 மணி நேர தொலைக்காட்சிகளுக்கு தீனி போட்டுக்கொண்டிருக்கிறது. தங்கள் பதவி, அதிகாரம், பண வரவு ஆகியவற்றை பாதுகாக்க இறுதிப்போரில் ஈடுபட்டுவரும் வேளையில், விவசாயி எலிக்கறி சாப்பிட்டால் என்ன? செத்து சுண்ணாம்பாகப் போனால் எங்களுக்கென்ன என, தங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக கடமையாற்றுகிறார்கள்.

விவசாயிகள் போராட்டத்தில் ஏதேனும் நியாயம் உள்ளதா? அல்லது பாஜக சொல்வதுபோல் ‘தூண்டிவிடப்பட்டதாலும்’ ‘உள்நோக்கத்தோடும்’ விவசாயிகள் போராடுகிறார்களா? இந்தக் கேள்விகளுக்கான விடை தேடியபோது 19-04-2017 அன்று வந்த ‘மின்ட்’ செய்தித்தாளில் வெளியான கட்டுரை அதற்கான விடையைக் கூறுவதை அறிந்தேன். அந்தக் கட்டுரையின் சாரத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

‘Tamil Nadu's protesting farmers are the most distressed in India' என்பதுதான் அக்கட்டுரையின் தலைப்பு. தலைப்பிலேயே நமது கேள்விக்கான விடை கிடைக்கிறது. இந்தியாவிலேயே மிகவும் சிரமத்தில் இருப்பவன் தமிழக விவசாயி என்பதுதான் அக்கட்டுரையின் தலைப்பு. மின்ட் செய்தித்தாள் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ‘ஊரக துயரக் குறியீடு எண்’ என (Rural Distress Index) ஒன்றை உருவாக்கியது. வறுமைக்கும், செல்வத்துக்கும், மனிதவள மேம்பாட்டுக்கும், பால் சமத்துவத்துக்கும் (Gender Equality), சமமின்மைக்கும் என சமுதாயத்தின், பொருளாதாரத்தின் பல கூறுகளின் நிலையை அறிந்துகொள்ள இத்தகைய குறியீட்டு எண்களை உருவாக்கிப் பயன்படுத்துவது வாடிக்கை. விலைவாசி உயர்வை அறிய Consumer Price Index-ஐ பயன்படுத்துவர். மனித வள மேம்பாட்டை அறிய Human Development Index-ஐ பயன்படுத்துவர். நமது நாட்டின் கிராமப்புறங்களில் துயரம் தொடர்கதையானதால் உருவாக்கப்பட்டதுதான் Rural Distress Index.

ஒரு நாட்டில் கிராமப்புற துயரக் குறியீட்டு எண் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுவது எவ்வளவு பெரிய அவலம். இதைப்பற்றி டெல்லிக்கும் கவலையில்லை. சென்னைக்கும் கவலையில்லை. ஆகையால், கிராமப்புற துயர குறியீட்டு எண் புழக்கத்துக்கு வந்து நிலைத்தும் விட்டது.

இது ஒருபுறமிருக்க, இந்த குறியீட்டு எண் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்று பார்க்கலாம். மூன்று காரணிகளை இந்த எண் கணக்கில் கொள்கிறது. முதலாவதாக, விவசாய உற்பத்தியின் மதிப்பில் ஏற்பட்ட ஓராண்டு வளர்ச்சி. இரண்டாவதாக, கிராமப்புற கூலியில் ஏற்பட்ட உயர்வு. மூன்றாவதாக, டிராக்டர் விற்பனையில் ஏற்பட்ட ஓராண்டு வளர்ச்சி.

இந்த மூன்று காரணிகளையும் சமப்படுத்தி (Normalize) அதன் சராசரியை எடுத்துக்கொள்கிறார்கள். இந்த சராசரியானது மிகக் குறைந்த அளவாக ‘0’ ஆகவும் மிக அதிகமாக ‘1’ ஆகவும் இருக்கும். நடைமுறையில் இவ்வாறு கணக்கிடப்படும் குறியீட்டு எண் ‘0’க்கும் ‘1’க்கும் இடையில் இருக்கும். ‘0’ மதிப்பு என்றால் துயரமே இல்லை என்று பொருள். ‘1’ என்றால் துயரம் தவிர வேறொன்றுமில்லை என்று பொருள்கொள்ள வேண்டும்.

எப்போதெல்லாம் மழை பொய்த்துப்போகிறதோ, அப்போதெல்லாம் இந்தக் குறியீட்டு எண் உச்சம் தொடும் (’1’ ஐ நெருங்கும்). இதன் வாயிலாக, இந்திய வேளாண்மை இன்னும் பெருமளவில் பருவமழையையே நம்பியுள்ளது நமக்குப் புலப்படும்.

மேலும் வேளாண் பொருள்களின் உற்பத்தி உயரும்போதும், டிராக்டர்கள் விற்பனை அதிகரிக்கும்போதும் இந்த குறியீட்டு எண் குறைந்து, துயரம் குறைந்ததைச் சுட்டும். இவை இரண்டும் இந்த குறியீட்டு எண்ணை பாதிக்கும் அளவுக்கு ஊரக கூலிமட்டம் இந்தக் குறியீட்டு எண்ணை பாதிப்பதில்லை. ஊரக கூலிமட்டம் என்பது வேளாண் தொழிலில் நிலவும் கூலி மற்றும் வேளாண்மை தவிர்த்த பிற ஊரக தொழில்களில் நிலவும் கூலி ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதே.

இந்தக் குறியீட்டு எண் என்ன நிலவரத்தைப் பிரதிபலிக்கிறது என்பதை காண்பதற்கு முன்பாக, நாம் ஒரு புள்ளி விவரத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். 2016ஆம் ஆண்டில் தென்மேற்குப் பருவ மழைக்காலத்தில் பொழிந்த மழையின் அளவு, இந்திய அளவில் சராசரியைவிட 8.2 விழுக்காடு குறைவு. ஆனால், தமிழகத்தில் மழைப்பொழிவின் அளவு சராசரி அளவைவிட 43.7 விழுக்காடு குறைவு. பொய்த்துப்போன மழை ஒரு காரணி என்றால், கடன் சுமை மற்றுமொரு காரணி. கடன் சுமையால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள்தான் பெரும்பான்மையினர் என்பது National Crime Record Bureau புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இரு புள்ளி விவரங்களையும் கவனத்தில் நிறுத்தி இப்போது விவாதிக்கப்படும் குறியீட்டு எண்ணைப் புரிந்துகொள்ள வேண்டும்.

‘மின்ட்’ செய்தித்தாள் தற்போது ஊரக துயர குறியீட்டு எண்ணை கணக்கிட்டுள்ளது. இத்தகைய குறியீட்டு எண் இந்திய நாட்டிலுள்ள அனைத்து பெரிய மாநிலங்களுக்கும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த குறியீட்டு எண்ணைப் பார்த்தால், தமிழக விவசாயிகள்தான் மிக அதிக அளவிலான துயரத்தை அனுபவிப்பது தெளிவாகிறது. அவர்களது துயரம் மூன்று காரணிகளாலும் நிகழ்கிறது. மழைப்பொழிவு பொய்த்தது, விளைச்சல் இல்லை, வேறு வருமானமும் இல்லை. இவை மூன்றும் ஒருங்கே சேர்ந்தால் விவசாயியின் கதி என்னவாகும்? மற்ற மாநிலங்களின் நிலை இந்தளவுக்கு மோசமில்லை. சுபிட்சம் மலர்ந்துவிட்டது என்று பொருளில்லை. அம்மாநிலங்களில் மழைப்பொழிவு சராசரி அளவைவிட சிறிதே குறைந்துபோனது என்பதால் துயரம் குறைந்துள்ளது. தமிழகத்தில் பெருமளவு மழை பொய்த்ததால் துயரம் உச்சம் பெற்றுள்ளது.

ஆக, தமிழக விவசாயிகளின் போராட்டம் தூண்டப்பட்டதா என்றால், ஆம், தூண்டப்பட்டதுதான் என அறுதியிட்டுக் கூற முடியும். துயரம் தூண்டிய போராட்டம் அது. (Distress Driven). மழை பொய்த்து, வருமானம் அற்றுப்போய், கடன் சுமையும் அழுத்துவதால் தமிழக விவசாயி துயரக் கடலில் மிதக்கிறான். ஆகவேதான் கடன் தள்ளுபடி, புதிய நீர் ஆதாரங்கள் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நூதனமாகப் போராட்டத்தைத் தொடர்கிறான். பாஜக கூறுவதுபோல் வேறு தூண்டுதல்கள் இல்லை. அவர்கள் போராட்டம் முற்றிலும் நியாயமானது. பொம்மலாட்டம் ஆடும் ஒன்றிய அரசு அவர்கள் குரலுக்கு செவி சாய்க்குமா? ஆட்டுவிக்கப்படும் தமிழக பொம்மைகள் கண்டுகொள்வார்களா போராடும் விவசாயிகளை?

கட்டுரையாளர் குறிப்பு: ஜெ.ஜெயரஞ்சன்

சென்னை மாற்றுவளர்ச்சி மையத்தை (ஐடிஏ) உருவாக்கி, தொடக்கம் முதல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். தமிழக சமூக, பொருளாதாரப் பிரச்னைகள் குறித்துக் கடந்த முப்பது ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் முக்கிய ஆய்விதழ்களிலும் புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன. இந்திய அரசும், தமிழக அரசும் இவரது ஆய்வுகளை, கொள்கை முடிவு எடுப்பதற்குப் பயன்படுத்தி வருகின்றன.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon