மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

இந்தி எதிர்ப்பு உணர்வை வலுப்படுத்தும் மத்திய அரசு!

இந்தி எதிர்ப்பு உணர்வை வலுப்படுத்தும் மத்திய அரசு!

பல மொழிகள் பேசுகிற மக்கள் வாழ்கின்ற பிரிட்டிஷ் இந்தியாவில் முதன்முதலில் இந்தி தேசிய மொழியாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டபோது, அதை எதிர்த்து தெற்கிலிருந்து தமிழர்களும், வடக்கிலிருந்து வங்காளிகளும் மட்டுமே குரல் கொடுத்தனர். காலப்போக்கில் வங்காளிகள் இந்தி எதிர்ப்பிலிருந்து பின்வாங்கிக் கொண்டாலும் தமிழகத்தில் மட்டும் அது நீருப்பூத்த நெருப்பாகவே இருக்கிறது. ஆனால், அது 1938 மற்றும் 1963 - 65ஆம் ஆண்டுகளில் இருந்த அதே தகிப்புடன்தான் தற்போதும் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் சுதந்திரம் பெறப்போகும் இந்தியா என்ற ஒரு தேசத்துக்கு ஒரு பொது மொழி தேவை. அது இந்தியாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். 1936ஆம் ஆண்டில் சென்னை மாகாண சட்டசபை பொதுத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் 159 இடங்களுடன் ஆட்சியைப் பிடித்தது. சென்னை மாகாணத்தின் முதலமைச்சரான காங்கிரஸ் தலைவர் ராஜாஜி, இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து கரந்தை தமிழ்ச் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது. இதுதான் ஓர் அமைப்பு ரீதியான முதல் இந்தி எதிர்ப்பு குரல், அதன் பிறகு, சோமசுந்தர பாரதியார், நீதிக்கட்சி தலைவர் உமாமகேசுவரம் பிள்ளை, கே.எம்.பாலசுப்ரமணியம், பெரியார், அண்ணா, மறைமலை அடிகள், தருமாம்பாள், மீனாம்பாள் உள்ளிட்ட அன்றைய தலைவர்கள் இந்தியை எதிர்த்துப் போராட இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தனர். 1937ஆம் ஆண்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பெரிய அளவில் பெண்களின் பங்களிப்பு இருந்தது. அன்றைக்கு இந்தியை எதிர்த்து சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் பத்தாயிரம் பெண்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இந்திக்கு மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்ததைப் பார்த்த அன்றைய காங்கிரஸ் அரசு பின்வாங்கியது. பின்னர், 1940களிலும், 1950களிலும் இந்தி புகுத்த முயற்சித்தபோது தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

சுதந்திரத்துக்குப் பிறகு, 1960களில் மீண்டும் இந்தி கட்டாயமாக்க மத்திய அரசு முயற்சித்தபோது, தமிழகத்தில் 1963 - 65ஆம் ஆண்டுகளில் இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. அன்றைய திமுக-வின் அனைத்து தலைவர்களும் இந்தி எதிர்ப்பு போராட்டக்களத்துக்கு வந்தார்கள். மாணவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு தீக்குளித்தார்கள். போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்தி எதிர்ப்பு போராட்ட காலகட்டத்தில் திமுக ஆதரவு பத்திரிகையான ‘நம்நாடு’வில் இந்தி எதிர்ப்பு போராட்டச் செய்திகள் வராத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு திமுக, இந்தி எதிர்ப்பு போராட்டத்தைப் பிரசாரமாக்கியது. இந்த இந்தி எதிர்ப்பு போராட்டப் பின்னணியில்தான் 1967ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், திமுக அண்ணா தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றியது. திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்தியை விடுத்து, ஆங்கிலம், தமிழ் என்ற இருமொழிக் கொள்கையைக் கொண்டுவந்தது. 2017ஆம் ஆண்டு கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது, ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் வந்துவிட்டது அதனால் போராட்டத்தைக் கைவிடுங்கள் என்று அரசு தரப்பு கூறினாலும், அதனை ஏற்காமல் போராடிக்கொண்டிருந்தவர்களைத் தமிழக அரசு அடித்து விரட்டியது. அதே போல, 1967ஆம் ஆண்டும் இருமொழிக் கொள்கை போதாது, அதிலும் தமிழுக்கு முன்னுரிமை வேண்டும் தமிழ் மட்டுமே வேண்டும் என்று போராட்டத்தைத் தொடர்ந்த இளைஞர்களை அண்ணா தலைமையிலான அன்றைய திமுக அரசும் அடித்து விரட்டியது.

தமிழகத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க மொழிப்போர் நடந்து ஐம்பது ஆண்டுகளாகிறது. திமுக ஆட்சிக்கு வந்து ஐம்பது ஆண்டுகளாகிறது. இந்த ஐம்பது ஆண்டுகளில், திமுக-வும், திமுக-விலிருந்து பிரிந்து உருவான அதிமுக என இரண்டு கட்சிகள் மட்டுமே தமிழகத்தை ஆட்சி செய்து வந்திருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் மீண்டும் தமிழகத்தில் இந்தி மொழி திணிப்பும், இந்தி எதிர்ப்புக் குரல்களும் கேட்கின்றன.

இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நாடாளுமன்றத்தில் இனி பிரதமர், மத்திய அமைச்சர்கள் இந்தி மொழியில் பேச, எழுத தெரிந்திருந்தால் இந்தியில்தான் பேச வேண்டும். இந்தியில்தான் அறிக்கை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசின் முடிவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். பாஜக மூத்தத் தலைவர் அஸ்வினிகுமார் உபாத்யா நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மத்திய அமைச்சர்கள் பலரும் இந்தி மொழியை நாடு முழுவதும் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று பேசி வருகின்றனர். இந்த பின்னணியில்தான், ஒரு காலத்தில், தமிழகத்தில் ரயில் நிலையங்களில், அஞ்சல் நிலையங்களில், தார் பூசி அழிக்கபட்ட இந்தி தற்போது மீண்டும் மைல் கல்களில், ரயில் நிலையங்களில் பளிச்சிடுகிறது. இதற்கு தமிழகத்தில் ஆங்காங்கே சில எதிர்ப்புக் குரல்களும் எழுந்து வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில், ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்னரும் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு உணர்வு இன்னும் அப்படியேதான் இருக்கிறதா? தமிழர்களின் தமிழ் மொழிப்பற்று இன்னும் அதே அளவில்தான் இருக்கிறதா? இந்தி எதிர்ப்பு போராட்டப் பின்னணியில் அதிகாரத்துக்கு வந்த திமுக, அதிலிருந்து கிளைத்த அதிமுக மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்த தயாராக உள்ளதா? தற்போது தமிழக மக்களின் இந்தி மொழியைப் பற்றிய அபிப்பிராயம் என்ன? என்று பல தொடர் கேள்விகள் எழுகின்றன.

தமிழர்களின் மொழிப்பற்று எந்த அளவிலும் குறையவில்லை. அதே நேரத்தில், இந்தி எதிர்ப்பு உணர்வு 1960களில் இருந்த அளவுக்கு தற்போது இல்லை. தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்ட பல தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் இந்தியும் ஒரு பாடமாக கற்பிக்கத் தொடங்கி கால் நூற்றாண்டுக்கு மேல் ஆகிறது. இந்தி மொழி இங்கு பெரிய அளவில் பரவலாகாவிட்டாலும் தனியார் பள்ளிகளில் படிக்கிற மாணவர்களுக்கு அறிமுகமாகிவிட்டது. இந்தி எதிர்ப்பை முன்னிறுத்தி தமிழ்மொழிப் பற்றை பிரசாரம் செய்து, தமிழ் என்ற அடையாளத்தின் மூலம் அதிகாரத்துக்கும் தமிழக அரசின் சகல துறைகளிலும் மேலே வந்தவர்கள் அதிலிருந்து விலகிவிட்டார்கள். அது மட்டுமல்லாமல் தமிழ் மொழியில் கல்வி தொடர்பான சிந்தனைகள், கற்பிக்கும் முறை, பல்துறை ஆய்வுகள், தமிழின் உலகம் தழுவிய வீச்சு எதுவும் நடைபெறாமல் தரிசனமின்றி தேக்கம் கண்டுள்ளது. மேலும், மாநில அரசின் இருமொழிக் கொள்கையில் தீவிரம் இல்லாததாலும், அரசு பள்ளிகளில் கற்பிக்கும் முறையில் ஏற்பட்ட குறைபாடுகளாலும் தற்போது பல மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலுமே முழுமை பெறாத ஒருவித அரைகுறை நிலையிலேயே உள்ளனர். தான் படித்த தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் பிரகாசிக்க முடியாத ஒரு தலைமுறை உருவாகியிருக்கிறது (இதில் விதிவிலக்காக உள்ளவர்களை எண்ணிக்கைகளில் அடக்கிவிடலாம்). இந்தச் சூழலில் அலுவல் மொழியாக உள்ள இந்தியை மத்திய அரசு சாத்தியாமான எல்லா வழிகளிலும் இந்தியைத் தேசிய மொழியாக்கிவிட வேண்டும் என்று முயல்கிறது. தாய்மொழி பற்று கொண்ட தமிழர்களின் ஆழ்மனதில் தற்போதும் இந்தி திணிப்புக்கு எதிரான உணர்வைக் கொண்டிருந்தாலும், அது இந்தி எதிர்ப்பாக வெளிப்பாடாமல் தமிழ் அடையாளத்தைச் சொல்லி ஏமாற்றியவர்களின் மீதான வெறுப்பாக வெளிப்பட்டு, இந்திக்கு ஆதரவாக பேசும் எதிர்நிலையை அடைந்துள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகத்தில் இந்தி மொழி பற்றிய அபிப்ராயமும் மாறியுள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில், தாய்மொழி வழிக் கல்வியை வலியுறுத்துகிற அறிவுஜீவிகளின் உறுதியான இந்தி திணிப்பு எதிர்ப்புக் குரல்களும், தமிழ் பற்றாளர்களின் தார்மீகக் குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன. திமுக-வின் செயல் தலைவர் ஸ்டாலின் தன்னுடைய அறிக்கையில், “தாய்மொழி மீது இன்னொரு மொழி ஆதிக்கம் செலுத்துவதை 1938ஆம் ஆண்டு முதலே எதிர்த்து நின்று வெற்றி கண்ட நிலம், தமிழகம். மொழிப் போராட்டத்தை முன்னெடுத்து உயிர்த்தியாகம் செய்த வீர வரலாறு திராவிட இயக்கத்துக்கு உண்டு என்பதை மத்திய அரசுக்கு நினைவூட்டுவதுடன், இந்திய தேசத்தை இந்தி தேசமாக்கி இன்னொரு இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு வித்திட வேண்டாம்” என்று கூறியுள்ளார். இவருடைய இந்த அறிவிப்பும் திமுக-வின் இந்தி எதிர்ப்பு போராட்ட மரபிலிருந்தே வெளிப்பட்டுள்ளது.

இப்படி பல தரப்பிலிருந்தும் வெளிப்படும் இந்தி எதிர்ப்பு குரல்களை வைத்து தமிழகத்தில் 1960களில் நடைபெற்ற போராட்டத்தைப் போல மீண்டும் ஓர் இந்தி எதிர்ப்பு போராட்டம் அதே எழுச்சியுடன் நடைபெறுவதற்கும் அல்லது நடத்துவதற்கும் சாத்தியமா என்றால், அது மத்திய அரசின் கையில்தான் உள்ளது. உண்மையில் தமிழகத்தில் செத்துப்போய்க் கிடந்த இந்தி எதிர்ப்பு உணர்வை பாஜக-வின் மத்திய அரசுதான் உயிர்ப்பித்திருக்கிறது. இனிவரும் காலங்களில், மத்திய அரசு இன்னும் கால் நூற்றாண்டுக்கு இந்தி தேசிய மொழி, இந்தியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாலே, தமிழகத்தில் நீருப்பூத்த நெருப்பாக இருக்கும் இந்தி எதிர்ப்பு உணர்வு கரியாகிவிடும். உண்மையில் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு உணர்வை வலுப்படுத்துவது மத்திய அரசுதான்.

- எ.பாலாஜி

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon