மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

சிறப்புப் பார்வை: UEFA காலிறுதியில் வியப்புக்குப் பஞ்சமில்லை!

சிறப்புப் பார்வை: UEFA காலிறுதியில் வியப்புக்குப் பஞ்சமில்லை!

UEFA சாம்பியன்ஸ் லீக் போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் முடிவடைந்திருக்கின்றன. ரியல் மேட்ரிட், ஜுவெண்டஸ், அட்லெட்டிகோ மேட்ரிட், மொனாகோ ஆகிய கிளப் டீம்கள் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கின்றன. எட்டு டீம்கள் கலந்துகொண்ட இந்தக் காலிறுதி ஆட்டங்கள், இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. ஒவ்வோர் அணியின் சொந்த கிரவுண்டில் அந்த இரு போட்டிகளும் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் சிறப்பான போட்டி எது என எந்த கால்பந்தாட்ட ரசிகர்களாலுமே முடிவெடுக்க முடியாது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக அரங்கேறிய போட்டி என ரியல் மேட்ரிட் மற்றும் பேயன் முனிக் அனிகள் மோதிய இரண்டாவது ஆட்டத்தை சட்டென சொல்லிவிடலாம். முதல் போட்டியில் ரியல் மேட்ரிட் இரண்டு கோல்களையும், பேயன் முனிக் ஒரு கோலும் அடித்தது. ரியல் மேட்ரிட் ஒரு கோல் முன்னிலையுடன் இருக்க இரண்டாவது ஆட்டம் தொடங்கியது. கால்பந்தாட்ட போட்டிகளின் வழக்கப்படி என்ன நடைபெற்றிருக்க வேண்டும்?

ஒரு கோல் முன்னிலையுடன் இருப்பதால், ரியல் மேட்ரிட் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு அதேசமயம் கவுன்ட்டர் அட்டாக்குகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். பார்சிலோனாவுக்கும் - ஜுவெண்டஸ் அணிக்கும் நடைபெற்ற மற்றோர் ஆட்டம் அப்படித்தான் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் மூன்று கோல்கள் முன்னிலை பெற்ற ஜுவெண்டஸ் பார்சிலோனா மேற்கொண்டு கோல் அடிக்கவிடாமல் தடுத்தது. ஆனால், ரியல் மேட்ரிட் அணியினர் வேறு ஐடியாவுடன் களமிறங்கியிருந்தனர்.

ரியல் மேட்ரிட் முன்னிலையில் இருந்தபோதும், அவர்களது டாப் டீம் ஆரம்பத்திலேயே களமிறங்கியது. கரிம் பென்சமா, ரொனால்டோ, இஸ்கோ ஆகிய டாப் அட்டாக்கிங் பிளேயர்ஸ் முதல் நிமிடத்திலிருந்தே ஓடி ஓடி விளையாடிக்கொண்டிருந்தனர். ரியல் மேட்ரிட்டைவிட ஒரு கோல் அதிகமாக அடிக்க வேண்டிய காரணத்தால் பேயன் முனிக் ஆரம்பம் முதலே அட்டாக்கிங்கில் ஈடுபட்டனர். முதல் போட்டியில் Yellow Card பெற்ற மார்டினெஸ் மட்டும் டீமில் இல்லை. மற்றபடி பேயன் முனிக்கும் முழு பலத்துடன் களம் கண்டது. பேயன் முனிக்கின் கோல் அடிக்கும் முயற்சியைத் தடுக்க, டிஃபண்டர்கள் - மிட்-ஃபீல்டர் - அட்டாக்கர் என தனித் தனியாக இயங்காமல் மொத்தமாகவே கோல் கம்பத்தை இரு அணிகளும் முற்றுகையிட்டன. ஓர் அணியின் கோல் முயற்சியைத் தடுத்ததும் சிறிதும் தாமதிக்காமல் அடுத்த அணி தாக்குதலைத் தொடங்கியது.

இவ்வளவு களேபரத்திலும் ஒருவர் மட்டும் ஓடாமல் நடந்து சென்றுகொண்டிருந்தார். ஆட்டத்தின் Referee கூட ஓடிக்கொண்டிருக்க அவர் மட்டும் நடந்தபடியே சென்றார். ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்தில் பேயன் முனிக்கின் அட்டாக்கர் விடெலுக்கு Yellow Card காட்டப்பட்டது. அதன்பிறகு 70ஆவது நிமிடம் வரை எவ்வித பெரிய சம்பவங்களுமில்லாமல் நன்றாக சென்றுகொண்டிருந்தது. அவ்வப்போது சின்ன சின்ன எச்சரிகைகளுடன் Referee கடந்து சென்றார். 53ஆவது நிமிடத்தில் லெவண்டௌஸ்கி ஒரு கோல் அடித்தார். ஆனால், 70ஆவது நிமிடம் தாண்டியதும் இரு அணிகளும் ஆக்ரோஷமடைந்தன. பேயன் முனிக் தன்னிடமிருந்த அத்தனை சப்ஸ்டிட்யூட் வீரர்களையும் பயன்படுத்தி ஓர் எனர்ஜியான நிலையை உருவாக்கியது. ரியல் மேட்ரிட் தரப்பில் அதுவரை ஓடிக்கொண்டே இருந்த பென்சமா மாற்றப்பட்டார். அசென்சியோ வந்தார். ஆட்டம் படு ரணகளமாகியது.

76ஆவது நிமிடத்தில் மார்சிலோ அடித்த பந்தை ஹெட்டர் செய்து ரொனால்டோ கோலாக்கி, லெவண்டௌஸ்கியின் கோலினால் சம நிலையை அடைந்த போட்டியை மீண்டும் தங்களுக்குச் சாதகமாக்கினார். ஆனால், இந்த மகிழ்ச்சி அதிக நேரம் நிலைக்கவில்லை. ரியல் மேட்ரின் கோலினால் சீண்டப்பட்ட பேயன் முனிக் அணி வீரர்கள், ரியல் மேட்ரிட்டின் கோல் கம்பத்தை முற்றுகையிட்டபோது செர்ஜியோ ராமோஸ் பந்தை உதைக்க அது கோல் கம்பத்துக்குள் சென்று பேயன் முனிக் அணிக்கு சாதகமாக அமைந்தது. அந்த கடைசி இருபது நிமிடங்கள் மட்டும் ஐந்து சப்ஸ்டிட்யூட்கள் மாற்றப்பட்டார்கள். பேயன் முனிக் அணி மூன்று Yellow Card-களைப் பெற்றது. அதில் ஒன்று விடெலுக்கு இரண்டாவது முறையாகக் கிடைத்ததால் Red Card கொடுக்கப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டார். முதல் போட்டியில் மார்டினெஸ் வெளியேறியது போலவே, இரண்டாவது போட்டியில் விடெல் வெளியேறினார். 10 வீரர்களுடன் பேயன் அணி தனது கவுன்ட்டர் அட்டாக்குகளைத் தொடர்ந்தாலும் கோல் எதுவும் அடிக்கமுடியாமல் போட்டியின் 90 நிமிடங்கள் முடிந்தபோது போட்டி டிரா ஆனது.

இதில் சோகமான விஷயம் எக்ஸ்ட்ரா டைம் தொடங்கியபோது பேயன் முனிக் அணியிடம் ஒரு சப்ஸ்டிட்யூட் கூட இல்லை. ரியல் மேட்ரிட்டிடம் ஒரு சப்ஸ்டிட்யூட் இருந்தது. ஆனாலும் அவர்களை உடனே பயன்படுத்திவிடாமல் அனுபவம் வாய்ந்த வீரரான டோனி குரூஸை அனைத்துப் பக்கங்களிலும் விளையாட வைத்தார் ரியல் மேட்ரிட்டின் பயிற்சியாளரான ஜுடேன். அதன் அவுட்புட் எக்ஸ்ட்ரா டைம் தொடங்கிய பத்து நிமிடங்களில் கிடைத்தது. ரொனால்டோவுக்கு மார்சிலோ கடத்திக்கொண்டுபோய் கொடுத்த பந்தை சரியாக 105ஆவது நிமிடத்தில் கோலாக்கிய ரொனால்டோ, 110ஆவது நிமிடத்தில் மீண்டும் அதேமாதிரி ஒரு கோலை அடித்தார். டோனி குரூஸ் பந்தை அதிவேகமாகக் கடத்திக் கொண்டுபோய் கொடுத்ததை அசென்சியோ 112ஆவது நிமிடத்தில் கோலாக்கினார். ரொனால்டோ இந்தப் போட்டியில் அடித்த இரண்டாவது கோல் மூலம் UEFA போட்டிகளில் 100 கோல்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அதன்பிறகு ஆட்டம் ரியல் மேட்ரிட்டுக்குச் சாதகமாக மாறியது. பேயன் முனிக் வீரர்கள் தொடர் கவுன்ட்டர் அட்டாக்குகளால் சோர்வடைந்தனர். அப்போது தான் சூடுபிடித்திருந்த ரியல் மேட்ரிட் வீரர்கள் ஆளுக்கொருப் பக்கமாக பேயன் முனிக் அணியின் டிஃபண்டர்களை ஓடவைத்தனர். இப்படியாக ரொனால்டோவின் ஐந்து கோல்களின் உதவியுடன் ரியல் மேட்ரிட் அணி 6-2 என்ற விகிதத்தில் காலிறுதியை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

ரியல் மேட்ரிட் அணியைப் பொறுத்தவரையில் ரொனால்டோ வித்தியாசமானவர். அதிகம் ஓட மாட்டார். அணியிலுள்ள மற்றவர்களுக்கு பாஸ் செய்யாததால், புதிதாக சேர்ந்திருக்கும் இளம் வீரர்களும் சரியான சமயத்தில் அவருக்கு பாஸ் செய்ய மாட்டார்கள். டிஃபண்டர்களாக இருக்கும் மார்சிலோ, செர்ஜியோ ராமோஸ் அல்லது மிட்-ஃபீல்டர் மோட்ரிக் ஆகியவர்களில் யாராவது ஒருவர்தான் ரொனால்டோவுக்கு பாஸ் செய்ய வர வேண்டும். இதனால் அதிகம் விமர்சிக்கப்படும் டீம் ரியல் மேட்ரிட் இருந்தாலும் அந்த அணிதான் வெற்றி பெறுகிறது. ஃபுட்பால் உலகுக்கே ஆகாத இந்த விஷயம் ரியல் மேட்ரிட்டில் மட்டுமே சாத்தியம்.

ரியல் மேட்ரிட் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தாலும், பார்சிலோனா அணி காலிறுதியில் தோற்றுப்போனதால் ரியல் மேட்ரிட் ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர். ரியல் மேட்ரிட் - பார்சிலோனா மோதும் பாரம்பர்யமான ‘எல் கிளாசிக்கோ’ போட்டியாக அரையிறுதி இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜுவெண்டஸ் அணி, ‘நான் கோல் அடிக்கலைன்னாலும் பரவாயில்லை நீ அடிக்கக் கூடாது’ என 90 நிமிடங்களும் டிஃபன்ஸ் மட்டும் விளையாடி பார்சிலோனாவை ஒரு கோல்கூட அடிக்கவிடவில்லை. மெஸ்ஸியின் மேஜிக் முயற்சிகள், நெய்மரின் டிரிக் ஷாட்கள், சுவாரஸின் ஏமாற்றுதல் என எந்த பொறிக்குள்ளும் சிக்காமல் ஜுவெண்டஸ் தப்பித்துக்கொண்டது. அந்தப் போட்டியின் முக்கியமான வீரர் ஜுவெண்டஸின் செல்லினி தான். கடந்தமுறை BVB Dortmund வந்ததுபோல இம்முறை மொனாகா அணி வந்திருக்கிறது.

அரையிறுதிக்கு வந்திருக்கும் நான்கு அணிகளில் இரண்டு அணிகள் ஸ்பெயினைச் சேர்ந்தவை. இரண்டு அணிகள் ஜெர்மனைச் சேர்ந்தவை. அணிகளுக்குள் இருந்த இந்தப்போட்டி இப்போது நாடுகளுக்கிடையேயானதாக மாறிவிட்டது. ஸ்பெயினின் தேசிய அணி வெற்றி பெற்றால் எப்படி மகிழ்வார்களோ அதேமாதிரி இந்தப்போட்டியையும் கொண்டாடுவார்கள். அரையிறுதியில் நான்கு அணிகளில் யார் யாருடன் மோதப்போகிறார்கள் என்பதை இன்று தேர்ந்தெடுப்பார்கள்.

- சிவா

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon