மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

தினகரன் தள்ளிவைப்பு; திவாகரன் திருவிளையாடல்!

தினகரன் தள்ளிவைப்பு; திவாகரன் திருவிளையாடல்!

அதிமுக-வில் இருந்து டி.டி.வி. தினகரன் தள்ளிவைக்கப்பட்டதற்குப் பின்னால் சசிகலாவின் தம்பி தஞ்சை திவாகரனின் பங்கு பெரிய அளவில் இருக்கிறது என்றும் கடந்த வாரம் நடந்த மகாதேவனின் இறுதிச் சடங்கிலேயே இதற்கான நாள் குறிக்கப்பட்டதாகவும் இப்போது தஞ்சை வட்டாரத்தில் இருந்து வரும் தகவல் தடதடக்கிறது.

இதுபற்றி டெல்டா அதிமுக வட்டாரங்களில் விசாரித்தோம். “தினகரன் கட்சிக்குள் மீண்டும் என்ட்ரி ஆவதை சசிகலாவே விரும்பவில்லை என்பதை, மின்னம்பலம் இதழில் வரும், ‘அ.தி.மு.க. இனி என்னாகும்?’ என்ற மினி தொடரிலேயே சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். அதுதான் உண்மை. தினகரன் கட்சியில் டாமினேட் செய்வதை சசிகலா அன்றும் விரும்பவில்லை, இன்றும் விரும்பவில்லை என்பதுதான் உண்மை.

சசிகலா சிறைக்குச் செல்லும்போதே துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை வாங்கிக்கொண்ட தினகரன், முதல் கட்டமாக டாக்டர் வெங்கடேஷை மட்டும் கட்சிக்குள் அழைத்துக் கொண்டார். மற்ற எவரும் கட்சிக்குள் நுழைவதை அவர் விரும்பவில்லை. குறிப்பாக எம்.நடராஜன், திவாகரன் உள்ளிட்டோர் கட்சியில் ஆதிக்கம் செலுத்துவதை அவர் ஒட்டுமொத்தமாக விரும்பவில்லை. அனைத்து அமைச்சர்களிடமும், ‘நான் சொல்வதை மட்டும் கேட்டால் போதும்… என் குடும்பத்தில் இருந்து இனி யாருக்கும் கட்சியில் வேலை இல்லை’ என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் கருணாநிதியை எதிர்த்தே அரசியல் செய்து இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையே டெல்லி தேர்தல் கமிஷனுக்குச் சென்று அரும்பாடு பட்டு இரட்டை இலை சின்னத்தை மீட்டவர் எம்.நடராஜன். அப்பேர்ப்பட்ட நடராஜனையே ஓரங்கட்டி வைத்துவிட்டார் தினகரன்.

இந்த நிலையில்தான் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற சசிகலாவின் கட்டளையை மீறி போட்டியிட்டார் தினகரன். அவர் போட்டியிடாமல் வேறு யார் போட்டியிட்டு எத்தனை கோடி ரூபாய் கொடுத்திருந்தாலும் இடைத்தேர்தல் நின்றிருக்காது. இதையெல்லாம் குறிப்பிட்டு சிறையில் இருக்கும் சசிகலாவுக்குத் திவாகரன் ஒரு கடிதம் எழுதி தன் மகனிடம் கொடுத்தனுப்பினார்.

இதற்கிடையில் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி சசிகலாவின் அண்ணன் மகன் தஞ்சை மகாதேவன் மரணம் அடைந்தார். மகாதேவனின் மரணத்தையடுத்து தஞ்சாவூரில் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் கூடினர். அங்கேதான் தினகரனை ஓரங்கட்டுவது என்று ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

மகாதேவனின் உடல் அருகிலேயே திவாகரனும், மகாதேவனின் தம்பியுமான தங்கமணியும் அமர்ந்திருந்தனர். ஏப்ரல் 15ஆம் தேதி மாலை தினகரன் அங்கே வந்த அடுத்த நிமிடம்… இருவரும் விருட்டென எழுந்து வெளியே போய்விட்டனர். மறுநாள் மகாதேவன் உடல் தஞ்சை மாரிக்குளம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

அப்போது இறுதி நிகழ்ச்சியிலும் தினகரன் வந்திருந்தார். உடல்நலம் நலிவுற்றிருந்த எம்.நடராஜனும் இறுதி நிகழ்ச்சிக்கு வந்தார். நடராஜனைப் பார்த்ததும் தினகரன் எழுந்து, 'உட்காருங்க’ என்று சொல்ல… தினகரனைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டு சென்றுவிட்டார் நடராஜன்.

மகாதேவனுக்கு அஞ்சலி செலுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் செல்லவில்லை. ஆனால், தனக்குப் பதிலாக தனது மகனை அனுப்பி வைத்திருந்தார் எடப்பாடி. முதல்வரின் மகன் மிதன் அஞ்சலி செலுத்த மட்டும் செல்லவில்லை. எடப்பாடியின் ஒரு முக்கிய செய்தியையும் திவாகரனிடம் தெரிவித்திருந்தார்.

அதாவது, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சில நாள்களுக்கு முன் தம்பிதுரையை அழைத்து விரிவாகப் பேசியிருக்கிறார். அப்போது, ‘எக்காரணம் முன்னிட்டும் தினகரன் கட்சியில் இருந்தால் மத்திய அரசின் டார்ச்சர்கள் தொடரும். தினகரனை ஒதுக்கிவைத்தால் மத்திய அரசு தமிழ்நாடு அரசிலோ அதிமுக-விலோ எந்தத் தலையீடும் செய்யாது’ என்று உறுதியளித்துள்ளார். இந்த செய்தி தம்பிதுரை மூலமாக எடப்பாடிக்கு வர… எடப்பாடி தன் மகன் மிதன் மூலமாக திவாகரனிடம் சொல்லி அனுப்பியுள்ளார்.

இதுபற்றி மரண வீட்டிலேயே கூடி விவாதித்துள்ளனர். அப்போதுதான் திவாகரன், ‘நான் அக்காவிடம் பேசியிருக்கேன். அக்காவுக்கே தினகரனின் செயல்பாடுகளில் உடன்பாடில்லை. எனவே நீங்கள் தைரியமாக தினகரனுக்கு எதிராக குரல் கொடுங்கள். நானும் வெளிப்படையாக அரசியல் செய்ய மாட்டேன். தினகரனை ஒதுக்கிவைப்பதால் கட்சிக்கு நல்லது என்றால் அதைச் செய்ய வேண்டியதுதான்’ என்று எடப்பாடி மகன் மிதனிடம் சொல்லி அனுப்பியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை எதுவுமே போன் மூலமாக நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இருக்கும் பல்வேறு எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள் திவாகரனால் பதவிபெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திவாகரனின் இந்த உறுதிக்குப் பிறகுதான் அமைச்சர்கள் ஆலோசனை என்ற பெயரில் தைரியமாகக் கூடியுள்ளனர். பத்து நாள் முன்னால் ஆர்.கே.நகரில் தினகரன் மேல் பூ தூவிய அமைச்சர்கள் எல்லாம் இப்போது தினகரனை ஒதுக்கி வைக்கிறோம் என்று தில்லாக அறிவிக்கக் காரணம் திவாகரன் மூலமாக வந்த உத்தரவுதான்” என்று சொல்லி முடித்தார்கள்.

விரைவில் திவாகரனிடம் இருந்து தன்னிலை விளக்கமாக ஓர் அறிவிப்பு வரலாம் என்றும் தஞ்சை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கிடைக்கின்றன.

இந்நிலையில், “என்னைக் கூப்பிட்டுச் சொல்லியிருந்தால் நானே ஒதுங்கியிருப்பேனே?” என்று கேட்டிருக்கிறார் தினகரன். ஆனால், பிஜேபி-யை எதிர்கொள்ள முடியாமல் விரக்தியில் இருக்கும் தினகரன் ஒருவகையில் தற்காலிக விடுதலை என்றுதான் இதை எடுத்துக் கொண்டிருக்கிறார். விரைவில் அவரும் ஒரு திட்டத்தோடு காய் நகர்த்துவார் என்கிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள்.

- ஆரா

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon