மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

விஜய் சேதுபதி படம் - புதிய தகவல்கள்!

விஜய் சேதுபதி படம் - புதிய தகவல்கள்!

விஜய் சேதுபதி நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கியவர் பாலாஜி தரணீதரன். தனித்துவமான திரைக்கதை, வசனங்கள், உயிரோட்டமான நடிப்பு, அருமையான நகைச்சுவை என்று பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டிய படம் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’. விஜய் சேதுபதியின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனை படமாகவும் அது அமைந்தது. அப்படத்தை தொடர்ந்து பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவான ‘ஒரு பக்க கதை’ படம் முடிவடைந்து ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடித்திருக்கிறார்.

பாலாஜி தரணீதரன் இயக்கும் அடுத்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். இப்படத்துக்கு ‘சீதக்காதி’ என்று பெயர் வைத்துள்ளார்கள். பாலாஜி தரணீதரன் - விஜய் சேதுபதி மீண்டும் இணைவது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்தப் படம் பற்றி சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் படம் பற்றியும், விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் பற்றியும் சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன தகவல்களின் அடிப்படையில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தின் பெயர் ‘அய்யா’. கொஞ்சம் வயதான தோற்றத்துடன் தான் விஜய் சேதுபதி நடிக்கிறார். நாடக மற்றும் சினிமா நடிகராகவும் இருக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு காதல் ஜோடி என்று யாரும் இல்லை. ஆனால், ரம்யா நம்பீசன், ஓவியா, காயத்ரி போன்ற பிரபல நடிகைகள் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். ஆனால், படத்தில் நடிகைகளாகவே அவர்கள் வருகிறார்கள். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா, நடிகரும் இயக்குநருமான மௌலி போன்றவர்கள் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

‘சீதக்காதி' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில், இயக்குநர் மகேந்திரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தத் தகவலை உறுதி செய்த இயக்குநர் பாலாஜி, “இப்படத்தில் கதாநாயகன், கதாநாயகி, வில்லன் போன்ற கதாபாத்திரங்கள் இல்லை. விஜய் சேதுபதி ஒரு நாடகக் கலைஞராக வருகிறார். அவரது கதாபாத்திரத்தைச் சுற்றி நடக்கும் விஷயங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகவுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் மகேந்திரன் நடிக்கிறார். தற்போதைக்கு படத்தின் கதை பற்றி அதிகம் கூற முடியாது” என்றும் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon