மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

பொறியியல் படிப்புக்குக் கலந்தாய்வு எப்போது?

பொறியியல் படிப்புக்குக் கலந்தாய்வு எப்போது?

மாணவர்கள் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்களை மே 1 முதல் ஆன்லைனில் பெறலாம் என தமிழக உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மே 12ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எந்தத் துறையை தேர்ந்தெடுத்து படிக்கலாம், எந்த துறையை தேர்ந்தெடுத்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில், தமிழக உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் ஏப்ரல் 19ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர மே 1 முதல் மே 31 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஜுன் 20ஆம் தேதி ரேண்டம் எண்ணும் ஜுன் 22ஆம் தேதி தர வரிசைப்பட்டியலும் வெளியிடப்படும். இதையடுத்து ஜுன் 27ஆம் தேதி பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு தொடங்கும்” என்று அறிவித்தார். மேலும், அவர், “தமிழகத்தில் நீட் தேர்வு நடக்காது என்று நம்புவதாகவும், பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவி விரைவில் நிரப்பப்படும். கவர்னர் வித்யாசாகர் ராவ் விரைவில் துணைவேந்தர்களை நியமிப்பார்” என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த 2016 -17ஆம் கல்வியாண்டைப் பொறுத்தவரை பொறியியல் படிப்புக்கான 2,77,061 இடங்களில் 1,34,994 இடங்கள் மட்டுமே நிரம்பின. மீதி 1,42,067 இடங்கள் காலியாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon