மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

ராமர் கோயிலுக்காகத் தண்டனை ஏற்கத் தயார்: உமா பாரதி

ராமர் கோயிலுக்காகத் தண்டனை ஏற்கத் தயார்: உமா பாரதி

அயோத்தி பிரச்னைக்காக எந்தத் தண்டனையையும் ஏற்கத் தயாராக இருப்பதாக, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில், கடந்த 6-12-1992 தினத்தன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக இரண்டு வழக்குகள் தனித்தனி நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன. அதில், கரசேவகர்களுக்கு எதிரான வழக்கு லக்னோ நீதிமன்றத்திலும், பா.ஜனதா மூத்தத் தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்களுக்கு எதிரான வழக்குகள் ரேபரேலியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திலுமாக நடைபெற்று வருகின்றன.

பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரேபரேலி நீதிமன்றம் ரத்து செய்தது. இதை அலகாபாத் உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சி.கோஷ், ஆர்.எல்.நாரிமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க சி.பி.ஐ-க்கு அனுமதி வழங்கி நேற்று ஏப்ரல் 19ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. மேலும் பாபர் மசூதி இடிப்பின்போது உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்த கல்யாண் சிங், தற்போது ராஜஸ்தான் மாநில கவர்னராக பதவி வகித்துவருவதால் அவர் கவர்னர் பதவியை நிறைவு செய்யும்வரை இந்த வழக்கிலிருந்து அவரை விடுவித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து மத்திய அமைச்சர் உமா பாரதி டெல்லியில் நேற்று (ஏப்ரல் 19ஆம் தேதி) செய்தியாளர்களிடம் பேசுகையில், “அயோத்தி பிரச்னைக்காக எந்த தண்டனையையும் ஏற்கத் தயார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நடைபெற்ற இயக்கத்தில் நானும் ஓர் அங்கமாக பங்கேற்றதை எண்ணி பெருமைப்படுகிறேன். இதற்காக மன்னிப்புக் கேட்கவோ, வருத்தப்படவோ தயாராக இல்லை என்ற நிலைப்பாட்டில் நான் எப்போதுமே உறுதியாக இருக்கிறேன். அயோத்தியில் ராமர் கோயில் அமைவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. ராமர் கோயில் கட்டுவதற்காக எனது வாழ்க்கையைத் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon