மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

இந்திய எல்லையில் இலங்கை மீனவர்கள் கைது!

இந்திய எல்லையில் இலங்கை மீனவர்கள் கைது!

தமிழக எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 11 பேரை, இந்தியக் கடற்படை சிறைப்பிடித்துள்ளது.

தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களும் அவ்வப்போது சர்வதேச எல்லை தாண்டி மீன்பிடிப்பது வழக்கமாக உள்ளது. இதில், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டும்போது, இலங்கை கடற்படை கடுமையான தாக்குதல் நடத்துவதும், சுட்டுக்கொல்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

அதேசமயம், எல்லைதாண்டி வரும் இலங்கை மீனவர்களை, இந்திய கடற்படை கைது செய்து, முறையான விசாரணைக்குப் பின் விடுதலை செய்வதும் வழக்கமாக உள்ளது.

தற்போது, ஆழ்கடலில் மீன்கள் இனப்பெருக்கம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மே 30 வரை நடைபெறும் என்பதால், இந்த 45 நாள்களும் ஆழ்கடலில் மீன் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடையை தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் பின்பற்றி வருகின்றனர். எனவே, அதுவரை நாகையில் விசைப்படகு மீனவர்கள் படகுகளை பழுதுபார்த்தல், வலைகளை சரி செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், புதன்கிழமை (நேற்று) நாகையில் இருந்து 45 கிலோமீட்டர் கடல் மைல் தூரத்தில் இந்திய கடல் எல்லையில் இரண்டு படகுகளில் இலங்கை மீனவர்கள் 11 பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய கடற்படை வீரர்கள், 11 இலங்கை மீனவர்களை கைது செய்து இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் நாகை கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இலங்கையில் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணை நடைபெற்று வருகிறது

அண்மையில், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் ப்ரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து, இலங்கை மீனவர்களை அவ்வப்போது கைதுசெய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் தூத்துக்குடி கடற்பகுதியில், ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி இலங்கை மீனவர்கள் ஏழு பேரை கடற்படை காவலர்கள் கைது செய்தனர். மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று ராமநாதபுரம் நீதிமன்றம் இலங்கை மீனவர்கள் ஏழு பேரையும் புதன்கிழமை (நேற்று) மாலை விடுதலை செய்துள்ளது.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon