மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

வைரல் வீடியோவால் பணி நீக்கம் செய்யப்பட்ட ராணுவ வீரர்!

வைரல் வீடியோவால் பணி நீக்கம் செய்யப்பட்ட ராணுவ வீரர்!

எல்லை பாதுகாப்புப் படையின் 29ஆவது பட்டாலியனில் பணியாற்றிவந்த தேஜ்பகதூர் யாதவ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம், கடினமாக வேலை பார்க்கும் தங்களுக்கு, தரமற்ற உணவை அதிகாரிகள் வழங்குகின்றனர் என தேஜ்பகதூர் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்த வீடியோ வைரலாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர், அவர் மீது பலமுறை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பாதுகாப்புப் படை கருத்து தெரிவித்தது.

அதைத் தொடர்ந்து, மற்றொரு ராணுவ வீரரான பிரதாப் சிங் தனது உயரதிகாரிகள் பூட்ஸை பாலீஷ் போடச் சொல்வதாக ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அடுக்கடுக்காக ராணுவ உயர் அதிகாரிகள் மீது குற்றசாட்டுகள் எழுந்து வந்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அத்துடன், டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது.

இந்நிலையில், தேஜ்பகதூர் யாதவ், ஒழுங்கீன குற்றச்சாட்டுகளுக்காக பணிநீக்கம் செய்யப்படுவதாகப் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon