மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

சாமளாபுரம் தடியடி: வருவாய் அலுவலர் விசாரணை!

சாமளாபுரம் தடியடி: வருவாய் அலுவலர் விசாரணை!

சாமளாபுரத்தில் நடந்த மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தின்போது காவல்துறை நடத்திய தடியடி சம்பவம் தொடர்பாக, மாவட்ட வருவாய் அலுவலர் பொதுமக்களிடையே நேற்று ஏப்ரல் 19ஆம் தேதி விசாரணை மேற்கொண்டார்.

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் சந்திப்பில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி, கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில், ஏடிஎஸ்பி பாண்டியராஜன், போராட்டத்தில் ஈடுபட்ட அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்ணின் கன்னத்தில் அறைந்ததில் அவருக்குச் செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், மகளிர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ஏடிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை வருவாய்த் துறை சார்பில் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி மற்றும் காவல்துறை சார்பில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரம்யா பாரதி ஆகியோர் நியமிக்கப்பட்டு விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று ஏப்ரல் 19ஆம் தேதி வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி தடியடியால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிவகணேசன், சிவசுப்பிரமணியம், நிகில் பிரணவ், அருண்குமார், விஜயா 14 பேரிடம் நேரில் விசாரணை நடத்தினார்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தடியடி சம்பவத்தின்போது பணியில் இருந்த பல்லடம் டி.எஸ்.பி. மனோகரன் மற்றும் ஆய்வாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதேபோல், போலீஸ் சூப்பிரண்டு ரம்யா பாரதியும் விசாரணை நடத்தி வருகிறார். ‘இந்தச் சம்பவம் பற்றி பொதுமக்கள் ஏதேனும் தகவல் கொடுக்க விரும்பினால் என்னிடம் தெரிவிக்கலாம்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon