மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

முந்திரி: விலை உயர்வால் ஏற்றுமதி சரிவு!

முந்திரி: விலை உயர்வால் ஏற்றுமதி சரிவு!

முந்திரி பருப்பின் விலை உயர்த்தப்பட்டதால், கடந்த 2016-17 நிதியாண்டில் ஏற்றுமதி 18 சதவிகிதம் சரிவடைந்துள்ளது.

2015-16 நிதியாண்டில் ஒரு கிலோ முந்திரி விலை ரூ.513.99 ஆக இருந்த நிலையில், 2016-17 நிதியாண்டில் கிலோ ரூ.625.90 ஆக உயர்த்தப்பட்டது. இதனால் ஏற்றுமதியில் 18 சதவிகித சரிவு ஏற்பட்டுள்ளது. அதாவது, 2015-16 நிதியாண்டில் 96,346 டன் அளவிலான முந்திரி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த நிலையில், 2016-17 நிதியாண்டில் வெறும் 80,033 டன் அளவிலான முந்திரி மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. முந்திரி விலை உயர்ந்தது மட்டுமல்லாமல், முந்திரியைப் பதப்படுத்துவதற்கான செலவும் அதிகரித்துள்ளதும் ஏற்றுமதி சரிவுக்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

கேரளாவில் 80 கிலோ அளவிலான முந்திரியை பதப்படுத்துவதற்கான செலவு ரூ.3,500 ஆக உள்ளது. ஆனால், பிற மாநிலங்களில் அது ரூ.1,000 முதல் ரூ.1,350 வரை உள்ளது. ஏற்றுமதி சரிவு குறித்து இந்திய முந்திரி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் நிர்வாக இயக்குநர் எஸ்.கண்ணன் கூறுகையில், “முந்திரி பதப்படுத்துவதற்கான செலவு அதிகரித்துள்ளதால், அவற்றின் விலை சர்வதேச அளவில் டன்னுக்கு 2,250 டாலர் முதல் 2,300 டன் வரை அதிகரித்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் இந்திய முந்திரிகளுக்கு பிற நாடுகளுடனான போட்டித்தன்மை குறைந்துவிட்டது. பதப்படுத்துதலுக்கான செலவு அதிகரித்துள்ளதால் கேரளாவில் வெறும் 40 சதவிகித ஆலைகள் மட்டுமே தற்போது இயங்குகின்றன. எனவே, இத்துறையானது தனது தேவையை நிவர்த்தி செய்வதற்கு 50 சதவிகிதத்துக்கும் மேலாக இறக்குமதியையே பெருமளவில் சார்ந்துள்ளது” என்று கூறினார்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon