மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 8 ஏப் 2017

அராத்து எழுதும் உயிர் மெய் 2 (நாள் 32)

அராத்து எழுதும் உயிர் மெய் 2 (நாள் 32)

ஓவியம் : ரஞ்சித் பரஞ்சோதி

“ஆண் பெண் ரிலேஷன்ஷிப்பே ஏன் காம்ப்ளக்ஸுன்னு சொல்ற விதேஷ்?” என்றாள் சாந்தவி.

“ரெண்டு வேற வேற ஜெண்டர், எதிர்பார்ப்பு, ஆசை, நோக்கம், புரிதல்கள் எல்லாம் வேற வேற. இதைப்பத்தி நிறைய பேர் பேசிட்டாங்க, எழுதிட்டாங்க.”

“ம்ம்ம்.”

“இந்த செக்ஸ்ன்ற தேவை மட்டும் இல்லன்னா, ரெண்டு பேருக்கும் நடுவுல பெருசா எந்த ரிலேஷன்ஷிப்பும் உருவாக சாத்தியம் இல்லைன்னு நினைக்கிறேன்”.

“இப்ப கூட செக்ஸ் இல்லாம நிறைய ஆணும், பெண்ணும் ஃபிரெண்டா இருக்காங்களே விதேஷ். ஃபிரெண்ட்ஷிப்பும் ஒரு ரிலேஷன்ஷிப் தானே?”

“இருக்காங்க... இல்லேங்கல. ஆனா, ரெண்டு ஆண்களுக்கு இடையில் இருக்கும் நட்பின் நெருக்கம், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் வர சாத்தியமே இல்லை. அது மட்டும் இல்லாம, ஆண்கள் ஃபிரெண்ட்ஷிப் அளவுக்கு ரெண்டு பெண்களுக்குள்ளயே ஃபிரெண்ட்ஷிப் இல்லையே!”

“அப்படில்லாம் சொல்ல முடியாது. நானும் ஷமித்ராவும் ஃபிரெண்டாத்தானே இருக்கோம்.”

“ஆண்கள் நட்பின் அளவுக்குன்னு சொல்றேன். ஆக்சுவலா, ஃபிரெண்ட்ஷிப்னா என்னான்னே பெண்களுக்குத் தெரியலை, இல்லைன்னா நேச்சுரலாவே பெண்களால் நட்பா இருக்க முடியலை”.

“இதெல்லாம் பயங்கர ஆணாதிக்க கருத்து விதேஷ்” என்று சிரித்துக்கொண்டே சொன்ன சாந்தவி எழுந்து இருவருக்கும் இன்னொரு ரவுண்ட் ஊற்றினாள்.

“ஆணாதிக்க கருத்து எல்லாம் இல்லை சாந்தவி, என்னோட புரிதல். உதாரணாமா, இப்ப நான் இரண்டு பொண்ணுங்க கூட உறவு வச்சிருக்கேன்னு வச்சிக்கோயேன், என் ஃபிரெண்ட் கிட்ட ஓப்பனா சொல்வேன். அவனும் அப்படியா மச்சின்னு கேட்டுட்டு போய்ட்டே இருப்பான், இல்லன்னா பாராட்டுவான். இதே ஒரு பொண்ணு ஒருத்தன் கூட, அதுவும் தன் காதலன் கூட செக்ஸ் உறவு வச்சுக்கிட்டதயே தன்னோட க்ளோஸ் ஃபிரெண்ட் கிட்ட சொல்ல முடியாது. சொன்னா, கல்யாணத்துக்கு முன்னாடியே படுத்துட்டான்னு அவளோட ஃபிரெண்டே பேசுவா. ரெண்டு ஆண்கள் கூட உறவு வச்சுக்கிட்டா போச்சு. எந்த பொண்ணாலயும் இன்னொரு பொண்ணுகிட்ட ஷேர் பண்ணிக்கவே முடியாது. அவ்ளோ கேவலமா பேசுவாங்க. சம உரிமை பேசும், முற்போக்கு பெண்ணையே எடுத்துப்போம். அவளே இந்த விஷயத்துல அசிங்கமாத்தான் பேசுவா”.

“நீ சொல்றது உண்மைதான். யோசிக்கிறேன் விதேஷ்...”

“இந்த செக்ஸ் விஷயம்னு இல்லை. பெண்களுக்குள்ள பொதுவா வெளிப்படைத்தன்மை குறைவா இருக்கு. ஃப்ரீயா கெட்ட வார்த்தை பேசமுடியுதா உங்களால? உங்க கேங்க்லயே கெட்ட வார்த்தை பேசுற பொண்ணை கட்டம் கட்டி அசிங்கமா பேசிக்குவீங்க”.

“ஆமாம், கரெக்ட்தான்” - சிரித்தாள் சாந்தவி.

“ஜெனரலாவே பொண்ணுங்களுக்கு கிசுகிசு பேசறது, அடுத்தவங்களைப் பத்தி புறம் பேசறது, இதெல்லாம் அதிகம் இருக்கு. எவ்ளோ க்ளோஸ் ஃபிரெண்டுன்னாலும், கூடவே அவ மேல பொறாமையும் வளர்ந்துட்டே இருக்கு”.

“இதை நான் ஒப்புக்க மாட்டேன். ஆம்பளைங்களுக்குள்ள பொறாமை இல்லையா? அப்படியே விக்ரமன் பட ‘நண்பர்கள்’ மாதிரிதான் வாழறீங்களா? பொறாமையே நண்பர்களுக்குள்ளதான் வரும். அது இயல்பு. நண்பர்கள்கிட்ட வராமல் யாருன்னே தெரியாதவங்க மேல எப்படி பொறாமை வரும்?”

“இல்ல இல்ல, நான் ஆண்களுக்குள்ள பொறாமை வராதுன்னு சொல்லலை. பெண்களை கம்பேர் பண்ணா ரிலேட்டீவ்லி கம்மி. நண்பன் அதிகமா சம்பாதிச்சி வாழ்கைல உயர்ந்துட்டா பொறாமை வரும். பெரும்பாலும் ஆம்பளைங்களுக்கு பொருளாதார ரீதியிலான பொறாமைதான் வரும். ஆனா, பொண்ணுங்களுக்கு எல்லா விஷயத்திலும் பொறாமை இருந்துட்டே இருக்கு. தன்னோட தோழியோட காதலன் தோழியை நல்லா லவ் பண்ணா அதுக்கும் பொறாமைப்படுவீங்க. அவ புருஷன் அவளை நல்லா வச்சிகிட்டா அதுக்கும் பொறாமைப்படுவீங்க. பெட் ரூம்ல அவ புருஷன் அவளை நல்லா……..”

“போதும் விதேஷ்... போதும், நிறுத்திக்கோ” என்று சிரித்த சாந்தவி, “பொறாமையை ஏன் இவ்ளோ கெட்ட விஷயமா பார்க்கணும். பெண்கள் சார்ந்த, பெண்களுக்கே உரித்தான ஒரு அழகியல் விஷயமா பாக்கலாமே. இதனால் என்ன தீமை நடக்குது? ஒண்ணும் இல்லியே! ஆனா ஆண்கள் எவ்ளோ கெட்டது பண்றாங்க? கொலை, கொள்ளை, கற்பழிப்பு…” சாந்தவி பேசிக்கொண்டு இருக்கும்போதே குறுக்கிட்ட விதேஷ் ,

“ஹலோ , நாம இப்ப என்ன ஆணா, பெண்ணா பட்டிமன்றமா நடத்திட்டு இருக்கோம்? ஜஸ்ட் ஃபிரெண்ட்ஷிப்ல ஆணும் பெண்ணும் எப்படின்னு பேசிட்டு இருக்கோம். ஜெனரலா பார்த்தா ஆண் ரொம்ப மட்டம். ஆனா நட்புல மட்டும் பெண்கள் மட்டம், அவ்ளோதான். உங்களுக்குள்ள நட்பு சாத்தியமே இல்லை. மொத்தத்துல பெருந்தன்மையான, ஹானஸ்டான விஷயங்களில் நீங்க வீக். அது ஒரு மிகப்பெரிய குறைபாடு உங்களுக்கு”.

“அப்ப பெண்களை கேவலமான பிறவின்னு சொல்றீயா விதேஷ்?” என்ற சாந்தவியின் குரல் உயர்ந்து இருந்தது. இதுவரை ஜாலியாக சிரித்துக்கொண்டு பேசிக்கொண்டு இருந்த சாந்தவியின் முகம் கோபத்தில் சிறுத்தது.

ஆனால், சாந்தவியின் கோப முகமும், முகம் சிறுத்து உதடு துடித்ததும், அந்த கோபத்தின் விளைவால் இறுக்கமாகி கிண்ணென்றுப் போன சாந்தவியின் உடலும் விதேஷுக்கு கிளர்ச்சியை உண்டாக்கியது.

எழுந்து சென்று பக்கத்தில் அமர்ந்து முத்தமிட்டான்.

தள்ளிவிட்டாள் சாந்தவி.

நாள் 1|நாள் 2|நாள் 3|நாள் 4|நாள் 5|நாள் 6|நாள் 7|நாள் 8|நாள் 9|நாள் 10|நாள் 11|நாள் 12|நாள் 13|நாள் 14|நாள் 15|நாள் 16|நாள் 17|நாள் 18|நாள் 19|நாள் 20|நாள் 21|நாள் 22|நாள் 23|நாள் 24|நாள் 25|நாள் 26|நாள் 27|நாள் 28|நாள் 29||நாள் 30|நாள் 31

சனி, 8 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon