மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 ஏப் 2017

அராத்து எழுதும் உயிர் மெய் 2 (நாள் 31)

அராத்து எழுதும் உயிர் மெய் 2 (நாள் 31)

ஓவியம் : ரஞ்சித் பரஞ்சோதி

தன்மேல் சாய்ந்துகொண்ட ஷமித்ராவை தட்டிக்கொடுத்த விதேஷ், திரும்ப படுத்துக்கறியா என்றான். ஷமித்ரா திருதிருவென விழித்தாள். மணி பத்தரைதான் ஆகுது ஷமித்ரா என்றான் விதேஷ்.

ஷமித்ரா குடித்திருந்தது விதேஷுக்கு தெரிந்திருந்தது. ஒரு கிளாஸ் கோனியாக் தலைமாட்டில் இருந்தது.

கொஞ்சம் முன்மாலையில் குடிக்க ஆரம்பித்து, அப்படியே தூங்கிவிட்டாள் என்பதைப் புரிந்து கொண்டான்.

நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு ஷமித்ரா, நான் ஃபுட் ஆர்டர் பண்ணிட்டு எழுப்பறேன் என்று கூறிவிட்டு, ஷமித்ராவை கட்டிலில் படுக்கவைத்து போத்திவிட்டான்.

விதேஷும், சாந்தவியும் விதேஷின் நண்பன் வீட்டுக்கு டின்னருக்கு சென்று விட்டு இப்போது திரும்பியிருந்தனர். ஷமித்ரா திருச்சியில் இருந்த நாட்களில், விதேஷும் சாந்தவியும் ஒரு நாள் மட்டுமே ஒன்றாக வீட்டில் இருந்தார்கள். விதேஷ், வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தான். முன்னதாகவே சென்னை வந்தவன், சாந்தவியிடம் சொல்லாமல், சிண்டிரியாவை சந்தித்து இருந்தான்.

சிண்டிரியா, விதேஷிடம் ஒரு நட்சத்திர விடுதியில் மூன்று நாட்கள் சூட் ஒன்று பதிவு செய்ய முடியுமா என்று கேட்டிருந்தாள்.

முன்னேறிக்கொண்டு இருக்கும் நடிகைகளும் பின்னேறிக்கொண்டிருக்கும் நடிகைகளும் இதைப்போல யாரையேனும் பிடித்து வைத்திருக்கிறார்கள். நடிகைகளின் நிலைமை பாவம். 5 ஸ்டார் ஹோட்டல், சொகுசுக் கார், உயர் ரக ஆடைகள் என எல்லாமும் வேண்டும். நடிக்க சான்ஸ் இருக்கிறதோ இல்லையோ, வருமானம் வருகிறதோ இல்லையோ, இந்த ஆடம்பரங்கள் வேண்டும். அதற்கும் இதைப்போல யாரேனும் மாட்டிக்கொண்டுதான் இருப்பார்கள்.

ஆனால் சின்னதாக ஆசை காட்டிக்கொண்டேயிருக்க வேண்டும். என்றாவது மடிவாள் என்ற ஆசையை விதைத்துக்கொண்டேயிருக்க வேண்டும். மொத்தமாக, உத்தமத் தோழி வேடம் போட்டாலும் விலகிவிடுவார்கள் அல்லது படுத்தாலும் விரைவில் வேறு ஆள் தேடி விலகி விடுவார்கள்.

மேற்கண்ட இரண்டு பத்திகளும் கதாசிரியரின் கருத்து அல்ல. இந்தக் கதையில் இன்னும் சில அத்தியாயங்களுக்குப் பிறகு சிண்டிரியாவே சொல்லப்போகும் டயலாக்தான் இது. அதனால் நடிகைகளோ, பெண்களோ யாரும் கொதிக்கத் தேவையில்லை. இது கட்டுரை அல்ல, புனைவு. கதாசிரியரின் அதிகப்பிரசங்கித்தனத்தால், பின் நவீனத்துவம் என எதையோ புரிந்துகொண்டு, ஏழெட்டு அத்தியாயங்களுக்குப் பிறகு சிண்டிரியா சொல்வதாக எழுதியதை, கட் பண்ணி இங்கே பேஸ்ட் செய்துவிட்டார்.

இப்போது கடந்த மூன்று பத்தியை மறந்துவிட்டு, அதற்குமேல் உள்ள பத்தியைப் படியுங்கள். படித்தீர்களா? இப்போது தொடருங்கள்.

ஒரு சூட்டை பதிவு செய்து, சிண்டிரியாவிடம் தாரைவார்த்துவிட்டு, ஓர் மாலை மட்டும் அவளுடன் மிதமான மது அருந்தினான் விதேஷ்.

முன்னிரவின்போதே, நீயும் இங்கே அறை பதிவு செய்திருக்கிறாயா விதேஷ் என சிண்டிரியா கேட்க,

ஆம் என்று சொல்லி, அடுத்த 10 நிமிடத்தில் எழுந்துகொள்ள வேண்டியதாகப் போய்விட்டது விதேஷுக்கு. சொல்லியாச்சே என்று இன்னொரு அறை பதிவு செய்து, அங்கே போய் தொடர்ந்து குடித்தான். இவளுங்களுக்கெல்லாம் எப்பிடி நைஸா கட் பண்ணனும்னு தெரியிது என்று பொறுமினான்.

இந்த அறையில் தங்கி இருக்கிறேன் என்று மெசேஜ் அனுப்பினான்.

மெசேஜை பார்க்காதது போல காட்டியது வாட்ஸ் அப். தூங்கி விட்டாளாம்.

இதற்கு மறுநாள்தான் வீட்டுக்கு வந்தான் விதேஷ். அன்று சாந்தவியுடன் நல்ல கலவி. நிறைய பேசினார்கள். விதேஷுக்கு சாந்தவி கம்ஃபர்டாக இருப்பது போலத்தான் தோன்றியது.

இப்போது இந்த அத்தியாயத்தின் நான்காவது பத்தியை படியுங்கள். அதிலிருந்து தொடருங்கள்…….

அந்த நண்பன் வீட்டில் புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் பிரச்சனை. கல்யாணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகி இருந்தன. ஒரு குழந்தை. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பேசியும் புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் இடையில் என்ன பிரச்சனை என்று விதேஷாலும் சாந்தவியாலும் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஆளுக்கு குறைந்தது 45 பிரச்சனைகளை சொன்னார்கள். நான்கு கூட புரியவில்லை.

இப்போது மூன்றாவது பத்தியை படியுங்கள்…….ஆச்சா ?

ஷமித்ராவை படுக்க வைத்து விட்டு , விதேஷும் சாந்தவியும் தங்கள் அறைக்கு வந்தனர். ரெஃப்ரெஷ் ஆகி விட்டு , இரு அடையாள முத்தங்கள் இட்டுக்கொண்டு , இருவகையான மதுவகைகளை எடுத்துக்கொண்டு , இருவரும் புல்தரைக்குச் சென்றனர்.

புல்தரைக்குச் சென்றதும், சாந்தவியின் உடை மெல்லிய வெளிச்சத்தில் விதேஷைக் கவர்ந்தது. தெளிவாக கவனித்தான். அவளின் தொடைகள் உறுதியாக , அதே சமயம் பெண்மையை உறுத்தாத உறுதியாக இருந்ததை கவனித்தான். அவனுக்குள் ஏதோ கிளர்ந்தது. எழுந்து சென்று அவளை அள்ளி அணைத்து தூக்கி சுத்தினான்.

ஹேய் என்ன இது ஓல்ட் ஸ்கூல் ஃபேஷன் பேபி என்றாள் சாந்தவி.

விதேஷுக்கு தோள்பட்டை வலித்தது. இறக்கி விட்டு , தோளை மசாஜ் செய்ய ஆரம்பித்தான்.

ஒரு ரவுண்ட் மதுவை இருவரும் அருகருகே அமர்ந்து குடித்தார்கள். தூக்கி சுற்றியது , சாந்தவிக்கு விதேஷிடம் மென்மேலும் பிரியத்தை உண்டாக்கியது.

ஆமாம், கல்யாணாம் ஏன் இவ்ளோ காம்ப்ளக்ஸா இருக்கு விதேஷ் என்று ஆரம்பித்தாள் சாந்தவி ?

ஆண் - பெண் ரிலேஷன் ஷிப்பே காம்ப்ளக்ஸ்தான் என்றான் விதேஷ்.

இருவரும் விடிய விடிய இப்படியே குடித்துக்கொண்டு கல்யாணம் , ரிலேஷன்ஷிப் , லிவிங்க் டுகதர் பற்றி பேசிக்கொண்டு இருக்கப்போகிறார்கள். ஷமித்ரா இணைந்து கொள்வாளா இல்லையா என்பது இப்போதைக்கு தெரியாது. கதையை டைப் செய்த வரையில் ஷமித்ரா தூங்கிக்கொண்டு இருப்பதாகத்தான் இருக்கிறது.மின்னம்பலத்தில் அப்லோட் செய்வதற்குள் டிட் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் ?

நாள் 1|நாள் 2|நாள் 3|நாள் 4|நாள் 5|நாள் 6|நாள் 7|நாள் 8|நாள் 9|நாள் 10|நாள் 11|நாள் 12|நாள் 13|நாள் 14|நாள் 15|நாள் 16|நாள் 17|நாள் 18|நாள் 19|நாள் 20|நாள் 21|நாள் 22|நாள் 23|நாள் 24|நாள் 25|நாள் 26|நாள் 27|நாள் 28|நாள் 29||நாள் 30

வெள்ளி, 7 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon