மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 17 பிப் 2017

அ.தி.மு.க கொறடா உத்தரவு !

அ.தி.மு.க கொறடா உத்தரவு !

தமிழக சட்டமன்றத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ளதால், அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தவறாமல் சட்டசபைக்கு வந்திருந்து அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என அதிமுக கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி நேற்று பதவியேற்ற நிலையில், அடுத்த 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் அவருக்கு உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிச்சாமி முடிவுசெய்துள்ளார்.

இதற்காக ஆயத்தமாகிவரும் எடப்பாடி பழனிச்சாமி, அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும் ஒருங்கிணைத்து வாக்களிக்க ஏற்பாடுகளைச் செய்ய ஆலோசனை நடத்தி வருகிறார். அதேபோல், எதிர்க்கட்சிகளும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தங்கள் நிலைப்பாடு குறித்து இன்று எம்.எல்.ஏ.,க்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி, முடிவு எடுக்க உள்ளன.

சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.,க்கள் கொறடாவின் உத்தரவின்படி வாக்களிக்க வேண்டும். அவ்வாறு செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர் பரிந்துரை செய்யலாம்.

இந்நிலையில், ஆளுங்கட்சியான அதிமுக-வை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டமன்றத்துக்கு வர வேண்டும் என்றதோடு, அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி வாக்களிக்கும் எம்.எல்.ஏ.,க்கள் தகுதியை இழக்க நேரிடும் என கூவத்தூரில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார். மேலும், இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறுகையில்,

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி தலைமையிலான அரசு நிச்சயம் வெற்றி பெறும். அரசுக்கு ஆதரவாக வாக்களிக்காதவர்களை சட்டப்படி சபாநாயகர் தகுதியிழப்பு செய்வார் என்று அவர் கூறினார்.

வெள்ளி, 17 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon