மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 17 பிப் 2017

ஓ.பி.எஸ்.ஸுக்கு நட்ராஜ் எம்.எல்.ஏ., ஆதரவு!

ஓ.பி.எஸ்.ஸுக்கு நட்ராஜ் எம்.எல்.ஏ., ஆதரவு!

நாளை நடைபெறவுள்ள பெரும்பான்மை வாக்கெடுப்பில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ் அறிவித்துள்ளார்.

முன்னதாக, இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த நட்ராஜ் எம்.எல்.ஏ., ‘நாளை நடக்கவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் மக்களின் நம்பிக்கைக்கேற்பவும், எனது மனசாட்சிப்படியும் வாக்களிப்பேன் என்று அவர் கூறியிருந்தார். இதனால் நட்ராஜின் ஆதரவு யாருக்கு என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.

இந்நிலையில் இன்று மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த நட்ராஜ் எம்.எல்.ஏ., ‘நாளை நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் மக்கள் விருப்பப்படி ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிப்பேன் என்று தெரிவித்தார்.

ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாக நட்ராஜ் எம்.எல்.ஏ., அறிவித்ததைத் தொடர்ந்து ஓ.பி.எஸ்., ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பழனிச்சாமி ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு 123 ஆக குறைந்துள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,

"தமிழகத்தில் தற்போது நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலையில் நான் தொடர்ந்து நடுநிலையான நிலைப்பாட்டையே எடுத்துவந்தேன். என்னுடைய இத்தகைய நிலைப்பாட்டிற்காக பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளானேன். அதிமுக என்றுமே ஒன்றாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் தமிழக மக்களுக்கு அதிமுக அரசு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேறாமல் போய்விட கூடாது என்பதற்காகவும்தான் நான் இத்தகையை நிலைப்பாட்டை எடுத்து வந்தேன். ஆனால், கட்சியை ஒன்று சேர்க்கவேண்டும் என்ற எனது முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டது.

ஒரு எம்.எல்.ஏ.,வின் பணி என்பது அவருடையை தொகுதிக்கு மட்டுமே உட்பட்டதாக இருக்ககூடாது, அவர் தனது சட்டசபை பணிகளையும் முறையாக பின்பற்றவேண்டும். இதனால் நாளை நடைபெற உள்ள பெரும்பான்மை வாக்கெடுப்பு என்பது அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மேலும், நாளை நான் யாருக்கு வாக்களிக்கப் போகிறேன் என்பது குறித்து முடிவெடுக்க வேண்டியது என் கடமை.

என்னுடைய முடிவு என்பது என் தொகுதி மக்களின் விருப்பத்திற்கு ஏற்ற முடிவாக மட்டுமே இருக்க முடியும். எனவே நான் நாளை நடைபெற உள்ள பெரும்பான்மை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக வாக்களிக்க முடிவெடுத்துள்ளேன்.

நான் இன்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் மைலாபூர் தொகுதியில் உள்ள இளைஞர்களின் ஆதரவினால் மட்டுமே. ஜல்லிக்கட்டிற்காக நடைபெற்ற போராட்டத்தில் கூட இளைஞர்கள் அனைவரும் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் தங்களது போராட்டத்தை நடத்தினர். எனவே அவர்களின் கருத்துகளை புறக்கணிக்க முடியாது. அவர்களின் நலனுக்காக நான் தொடர்ந்து உழைப்பேன்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான் என்னை சட்டமன்ற வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தார். எனவே என்னுடைய விசுவாசம் என்றுமே அவரிடம் தான் இருக்கும். என்னுடைய சக அமைச்சர்கள் மீது நான் பெரும் மதிப்பு வைத்துள்ளேன். ஆனால் அதற்காக என்னுடைய தொகுதி மக்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட முடியாது. நேர்மையும் ஒருமைப்பாடும் தான் என்னுடைய ஒரே சொத்து நான் என்றுமே மைலாபூர் தொகுதி மக்களுக்காக தொடர்ந்து பணிபுரிவேன். நான் எடுக்கும் என் முயற்சிக்கு அனைவரும் என்னை ஆதரீப்பிர்கள் என்று நம்புகிறேன்" என்று நட்ராஜ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 17 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon