மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 17 பிப் 2017

அதிகரித்து வரும் குழந்தைத் திருமணம்!

அதிகரித்து வரும் குழந்தைத் திருமணம்!

நாட்டில் குழந்தைத் திருமணம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வந்தாலும், குழந்தைத் திருமணம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று விஜயவாடாவில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ப சுஜாதா தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில், ஆந்திராவில் நிலவிவரும் குழந்தைத் திருமணம் குறித்து பேசினார்.

ஆந்திராவில், 18 வயதுக்குக் கீழுள்ள 1,71,083 பெண்களுக்கு திருமணமாகியுள்ளது. அதுபோல், 21 வயதுக்கு கீழுள்ள 1,72,934 ஆண்களுக்கு திருமணமாகியுள்ளது.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு அளித்த புள்ளிவிவரங்களின்படி, கிருஷ்ணா மாவட்டத்தில்தான் அதிகளவு குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. அதாவது, அம்மாவட்டத்தில் மட்டும் 20,584 சிறுமிகளுக்கு திருமணம் நடந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, அனந்தபூர், விசாகப்பட்டினம் மற்றும் சித்தூர் மாவட்டங்கள் உள்ளன.

கடந்த 2011ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, நாட்டில் 2.4 சதவிகித பெண்கள் மற்றும் 2.5 சதகித ஆண்களுக்கு திருமண வயதை அடைவதற்குமுன்பே திருமணம் நடந்துள்ளது.

மேலும், 15 முதல் 19 வயதுடைய திருமணமான 11.8 சதவிகிதப் பெண்கள் கர்ப்பம் தரித்துள்ளனர். கிராமங்களில் 35.5 சதவிகிதப் பெண்களுக்கு, நகரப் பகுதியில் 26.3 சதவிகித பெண்களுக்கு 18 வயதை அடைவதற்குமுன்பே திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளன.

ஆந்திராவில் பதின்மூன்று மாவட்டங்களில். ஒன்பது மாவட்டங்களில் குறைந்தபட்சம் 2 சதவிகித பெண்கள் திருமண வயதை அடைவதற்குமுன்பே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். அதேசமயம், கடந்த 2015 ஆம் ஆண்டில் மட்டும் அனந்தபூர் மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் ஏழு மடங்கு அதிகரித்துள்ளது.

மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாமை மற்றும் வறுமை ஆகியவை குழந்தைத் திருமணம் அதிகரிப்பதற்கான காரணங்களாக அமைகின்றன என கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, பெண்கள் பருவமடைந்தவுடன் அவர்கள் பெற்றோர்கள் திருமணம் செய்துவைக்க முனைகின்றனர்.

மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், பொதுவாக கிராமப்புறங்கள் மற்றும் குக்கிராமங்களில் உயர்கல்வி இல்லாத காரணத்தால் பெண் குழந்தைகளுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்கப்படுகின்றன. படிப்பறிவு இல்லாத குடும்பங்களில் அதிகளவில் குழந்தைத் திருமணம் நடக்கிறது என தெரிவித்துள்ளது.

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு (NCPCR) தேசிய ஆணையம், எங் லிவ்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து குழந்தைத் திருமணத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதுமட்டுமல்லாமல், உலகத்தில் ஒவ்வொரு நொடிக்கும் பதினைந்து வயதுக்குக் கீழுள்ள ஒரு குழந்தைக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது என சேவ் தி சில்ட்ரன் என்ற தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறு வயதிலேயே திருமணம் முடித்து வைக்கப்படும்போது,அவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. இதனால், குடும்ப வன்முறைகளும்,விவகாரத்து வழக்குகளும் அதிகரிக்கிறது.

குழந்தைத் திருமணங்கள் குறித்து ஐ.நா. கூறுகையில், சர்வதேச அளவில் சிறுமிகள் திருமணம் நடைபெறும் 10 நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

தான்சானியா நாட்டில் பள்ளிச் சிறுமிகளை திருமணம் செய்தால் 30 ஆண்டுகள் சிறை என சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 17 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon