மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 17 பிப் 2017

ஜார்கண்ட் மாநாடு: முதலீட்டாளர்கள் மும்முரம்!

ஜார்கண்ட் மாநாடு: முதலீட்டாளர்கள் மும்முரம்!

ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நேற்று சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. அந்நிகழ்ச்சியில் அதானி, பிர்லா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளன. ஜார்கண்ட் மாநிலத்தில் பல துறைகளில் முதலீடு செய்யவிருப்பதாக அதானி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் அதானி தெரிவித்துள்ளார். ‘நவீன மின் உற்பத்தி நிலையம் தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டு, இந்த ஆண்டு இறுதியில் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளோம். மொத்தம் ரூ.20,000 கோடி முதலீடு செய்யவிருக்கிறோம். மேலும் 500 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கவும் அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது’ என்று கூறினார்.

வேதாந்தா நிறுவனத்தின் அனில் அகர்வால் பேசும்போது, ‘ஜார்கண்ட் என்பது இந்தியாவில் இருக்கும் ஆஸ்திரேலியா ஆகும். அதிகளவு இயற்கை வளங்கள் உள்ள மாநிலம். இங்கு பல திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். அதில், முதல் கட்டமாக ரூ.6,700 கோடி முதலீட்டில் 10 லட்சம் டன் உற்பத்தி திறனுள்ள உருக்கு ஆலை அமைக்கப்படும்’ என்று கூறினார்.

எஸ்ஸார் நிறுவனத்தின் சசி ரூசியா பேசுகையில், ‘ 4,700 கோடி முதலீட்டில் 1200 மெகாவாட் கொண்ட மின் உற்பத்தி நிலையம் முடிவுறும்நிலையில் இருக்கிறது. தவிர, ரூ.1,100 கோடி நிலக்கரி சுரங்கம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் 1,000 நபர்களுக்கு நேரடியான வேலை வாய்ப்பும், 4,500 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும்’ என தெரிவித்தார்.

ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமாரமங்கலம் பிர்லா, ‘ஜார்கண்டில் பல்வேறு துறைகளில் ரூ.5,000 கோடி முதலீடு செய்யவுள்ளோம் , இதுவரை இந்த மாநிலத்தில் ரூ.5,000 கோடி முதலீடு செய்திருக்கிறோம்’ என தெரிவித்தார். மாநாட்டில் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி, ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்தின் தலைவர் நவீன் ஜிண்டால் ஆகியோர் மாநாட்டு தூதர்களாக நியமிக்கப்பட்டனர்.

வெள்ளி, 17 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon