மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 17 பிப் 2017

பொதுச் செயலாளர் தேர்தல் : பொன்னையன்

பொதுச் செயலாளர் தேர்தல் : பொன்னையன்

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனை, சசிகலா கட்சியிலிருந்து நீக்கியதைத் தொடர்ந்து மதுசூதனன் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, முதலமைச்சர் பழனிச்சாமி உட்பட 13 பேரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தித் தொடர்பாளருமான பொன்னையன் கூறியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து பொன்னையன் கூறியதாவது: அதிமுக சட்டவிதிகளின்படி, பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அதிமுக-வில் தற்காலிக, இடைக்கால பொதுச்செயலாளர் பதவி இல்லை. அப்படியான பதவி சட்டவிதிகளுக்கு மாறானது. அந்தப் பதவி செல்லாது. சசிகலா சட்டவிரோதப் பதவியை வைத்துக்கொண்டு, பொருளாளர் பதவியிலிருந்து பன்னீர்செல்வத்தையும், அவைத்தலைவர் பதவியிலிருந்து மதுசூதனனையும் மற்றும் எங்களையும் நீக்கியது செல்லாது.

நாங்கள் அந்தப் பதவியிலேயே தொடர்ந்து நீடிக்கிறோம். 10 ஆண்டுகளாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்த டாக்டர் வெங்கடேஷ், டி.டி.வி.தினகரன் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டும், டி.டி.வி.தினகரனுக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்குவதற்கு சசிகலாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே, டி.டி.வி.தினகரன் துணை பொதுச்செயலாளர் பணியை மேற்கொள்ள முடியாது.

மேலும் அதிமுக அடிமட்ட உறுப்பினர்கள்மூலம், பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில், பொதுச்செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும்.

ஓ.பன்னீர்செல்வம் எளிமையானவர், அமைதியானவர், ஜெயலலிதாவின் இதயத்தில் குடியிருப்பவர், எம்.ஜி.ஆர். வழியில் நடப்பவர், அவருக்கு பொதுச்செயலாளர் பதவியை ஏற்க தகுதி இருக்கிறது. மக்களும், தொண்டர்களும் அவரைத்தான் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

பேரவை கூடும்போது உண்மைநிலை தெரியவரும். அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் எங்கள் பின்னால் வருவார்கள். ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக ஏற்றுக்கொள்வார்கள். ஜெயலலிதாவின் வழியில் நல்லாட்சி தொடரும் என்று கூறினார்.

வெள்ளி, 17 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon