மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 17 பிப் 2017

பெருகும் விபத்துக்களைக் குறைக்க புதிய தொழில்நுட்பம்

பெருகும் விபத்துக்களைக் குறைக்க புதிய தொழில்நுட்பம்

கடந்த பல ஆண்டுகளில் இல்லாத மோசமான ஓட்டுனர்கள் தற்போது இருக்கின்றனர் என அமெரிக்காவைச் சேர்ந்த அமெரிக்கன் ஆட்டோமொபைல் அச்சொசியேசன் (AAA)என்ற அமைப்பு அதன் கருத்துக்கணிப்பின் மூலம் வெளியிட்டது. அதன்படி வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டினால் பல்வேறு தரப்பினரும் வாகனம் ஓட்டும் போது மொபைல் போன்களை பயன்படுத்தி வருவதாகவும், அதனால் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகின்றன என்றும் தகவலை வெளியிட்டனர். மேலும் நடைபெறும் விபத்துக்களில் 88% 19-24 வயதிற்கு உட்பட்ட நபர்களால் நடைபெறுகிறது என்றும் தெரிவித்தனர்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதன் பல்வேறு நன்மைகளைப் பெற்று வந்தாலும், அதிலும் சில பிரச்னைகள் இருக்கிறது என்பதை இந்த தகவல் உணர்த்துகிறது. தொழில்நுட்பத்தை குறைகூறவில்லை, அதனை தவறாக பயன்படுத்தி வரும் நபர்களைப் பற்றித் தான் இப்போது பேச்சு. கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற விபத்துக்களில் சுமார் 40,000 நபர்களுக்கு மேல் உயிரிழந்துள்ளனர். இது 2015ஆம் ஆண்டினை காட்டிலும் அதிகம். அதேபோல் 2011-2013ஆம் ஆண்டிற்கான விபத்துக்களை ஒப்பிட்டு பார்க்கும் போது 10 சதவிகிதம் அதிகம். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்துக்களில் மொபைல் போன் பயன்படுத்தியதால் நடைபெற்ற விபத்துக்கள் மற்றவற்றை விட 2 மடங்கு அதிகம் என்ற தகவலை அறிவித்தது AAA அமைப்பு. மேலும், வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்தும் நபர்கள், சிக்னலைக் கண்டுகொள்ளாமல் செல்வது, குறிப்பிட்ட வேகம் செல்ல வேண்டிய இடத்தில் வேகமாக செல்வது, மற்றும் சாலையில் கவனமில்லாமல் செல்வதனால் இந்த விபத்துக்கள் பெரும்பாலும் ஏற்படுகின்றது என்றும், இதற்கான தீர்வினை விரைவில் கண்டறிந்து உயிரிழப்பினை குறைக்க வேண்டும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது.

மேலும், ஒரு குறிப்பிட்ட நபர்களிடம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் வெறும் 26 சதவிகித மக்கள் தான் மிக பாதுகாப்பான வாகன ஓட்டிகளாக இருகின்றனர் என்றும், 8 சதவிகித மக்கள் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர் என்றும், அதன் பின்னர் பெரும்பாலான நபர்கள் பாதுகாப்பற்ற வாகன ஓட்டிகளாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையை மாற்ற சில ஸ்மார்ட்போன்கள் தற்போது டிரைவிங் மோட் என்ற ஒன்றினை வைத்துள்ளனர். அந்த வசதியின் மூலம் ஓட்டுனர்கள் எந்தவித கவனச்சிதறலும் இன்றி வாகனம் ஓட்ட முடியும். இந்த வசதியை போல் இனி வாய்ஸ் கமாண்ட் மூலம் செய்திகள் அனுப்ப, வழிகாட்டும் வசதி போன்றவற்றை பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் கொண்டு வந்தால் விபத்துக்கள் பெருமளவில் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

வெள்ளி, 17 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon