மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 17 பிப் 2017

கடலூரில் கரையொதுங்கிய கச்சா எண்ணெய்!

கடலூரில் கரையொதுங்கிய கச்சா எண்ணெய்!

சென்னையைத் தொடர்ந்து, கடலூரில் எண்ணெய்ப் படலம் கரையொதுங்கியுள்ளது. இதனால், அங்குள்ள மீனவ மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சென்னை எண்ணூர் பகுதியில், கடந்த ஜனவரி 28ஆம் தேதி, காமராஜர் துறைமுகம் அருகே இரு கப்பல்கள் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு கடலில் மாசுபாடு கலந்தது. மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில், கடல் உயிரினங்கள் உயிரிழந்தன. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை எண்ணூர் பகுதியில் எண்ணெய்ப் படலம் அகற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னைக் கடலில் கலந்த கச்சா எண்ணெய் கடல் நீரோட்டத்தால் தற்போது கடலூர் பகுதியில் கரையொதுங்கி வருகிறது. கடந்த மூன்று நாட்களாக எண்ணெய்ப் படலம் அதிகமாக பரவி வருவதால் கடலில் துர்நாற்றம் வீசுகிறது. இதுமட்டுமல்லாமல், கடலில் மீனும் கிடைக்கவில்லை என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

எண்ணெய்ப் படலம் ஒதுங்கியுள்ள தாழங்குடா, தேவனாம்பட்டின‌ம், சோனங்குப்பம் உள்பட 49 மீனவ கிராம மக்கள், எண்ணெய்ப் படலத்தை அகற்ற இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டார். மேலும் மீன்வளத் துறை அதிகாரிகள் மற்றும் மாசு கட்டுபாட்டு வாரியத்தினர் கடலூரில் ஆய்வு நடத்தினார்.

கடலில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்கள் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்குமுன்பு புதுச்சேரி கடலில் எண்ணெய்ப் படலம் கரையொதுங்கியது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 17 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon