மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 17 பிப் 2017

சட்டமன்றத்தில் நாளை என்ன நடக்கும்? - அருண் வைத்தியலிங்கம் (வழக்கறிஞர்)

சட்டமன்றத்தில் நாளை என்ன நடக்கும்? - அருண் வைத்தியலிங்கம் (வழக்கறிஞர்)

தமிழக அரசியல் களத்தில், பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் பழனிச்சாமியை, சட்டப் பேரவையில் தனிப் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டுள்ளதை அடுத்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

ஆளுநர் பழனிச்சாமியை தனிப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கேட்டிருப்பது சரியா?

இந்திய இறையாண்மையை மக்களாட்சித் தத்துவம் வெற்றிகரமாக, முறையாகச் செயல்படுத்த வேண்டுமென்று, இந்திய ஒன்றிய நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகளால் வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு சாசனத்தின்படியும் அதற்கு வலுச்சேர்க்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும் அவ்வப்போது உருவாகும் சட்டங்களின் அடிப்படையில் ஆளுநரின் இந்த நடவடிக்கை சட்டப்படி சரியானதே.

இதில் மக்களாட்சித் தத்துவம், இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் மாண்பு என்று எதைக் கூறுகிறீர்கள்?

நமது அரசியலமைப்பு தோற்றுவிக்கப்பட்டபோது, கட்சித் தாவல் தடைச் சட்டம் என்ற ஒன்றை அரசியலமைப்பு சாசனத்தில் ஏற்படுத்தவில்லை. அதனால், நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்கள் விருப்பம்போல் (1980களில் கே.பாலசந்தரால் எடுக்கப்பட்ட ‘அச்சமில்லை அச்சமில்லை’ எனும் திரைப்படத்தில் ஒரு அரசியல்வாதி, மேடையில் பேசிக்கொண்டிருக்கும் ஒரே காட்சியிலேயே, அவன் தோளில் இருக்கும் ‘துண்டு’ நிறம் மாறிக்கொண்டே இருக்கும்) மாறிக்கொண்டே இருந்ததால் 1985ஆம் ஆண்டு, நமது அரசியல்வாதிகளுக்கு ஞானோதயம் வந்தது. இந்திய இறையாண்மையும், மக்களாட்சித் தத்துவமும், ஜனநாயக முறையும் சீர்கெடாமல் இருக்க, அரசியலமைப்பு சாசன ஷரத்துகள் 101(2) மற்றும் 191(2)ன் கீழ் திருத்தம் கொண்டுவந்தனர். 10ஆவது சட்ட இணைப்பு ஒன்றை ஏற்படுத்தி அதை, இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் ஒரு அங்கமாக ஏற்படுத்தி ஒரு முக்கியத்துவத்தையும் உருவாக்கிக் கொடுத்தார்கள்.

இந்த திருத்தமே, கட்சித் தாவல் தடைச் சட்டம் என்று நம்மால் பொதுவெளியில் அழைக்கப்படுகிறது. இதன்பின்னர், 2004ஆம் ஆண்டில் மேலும் மெருகூட்டப்பட்டு, திருத்தப்பட்டு தற்சமயம் நடைமுறையில் இருக்கிறது. இந்த புதிய திருத்தத்தின்கீழ், 2016ஆம் ஆண்டு தொடக்கத்தில் மத்திய பாஜக அரசின் திருவிளையாடலால், அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கவிழ்ந்தது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 31.07.2016-ல் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முக்கியத் தீர்ப்பை அளித்தது.

இத்தீர்ப்பின் அடிப்படையில், நமது ஆளுநர் எதற்காகவோ காலம் தாழ்த்தியபிறகு அரசியலமைப்பு மாண்பு மேலும் சீர்கெட்டுவிடாதவகையில் செயல்பட்டிருப்பதும் பாராட்டுக்குரியது.

கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் எனும் அரசியலமைப்பு சாசன 10வது சட்ட இணைப்பும், உச்சநீதிமன்ற தீர்ப்பும் என்ன சொல்கிறது?

10வது சட்ட இணைப்பான கட்சித் தாவல் தடைச் சட்டம், ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கினர் பிரிந்துபோனாலும், அப்படி பிரிந்துபோனவர்கள் வேறு கட்சியில் இணைந்தாலும், அவர்கள் தங்கள் மன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கமாட்டார்கள். சட்டமன்றத்தில் அக்கட்சியின் கொறடா இடும் உத்தரவுக்கு எதிராக எந்த முடிவை எடுத்தாலும் உறுப்பினர் தனது மன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிடுவார். ஆனால் கொறடாவின் உத்தரவை மூன்றில் இரண்டு பங்கினர் எதிர்த்தோ, செயல்படாமல்போனாலோ, அது சட்டமன்றத்தில் அக்கட்சி உடைந்ததாகக் கருதப்படுமே தவிர, அவர்களின் உறுப்பினர் பதவிக்கு பங்கம் ஏற்படாது.

பெரும்பான்மையை நிரூபிக்கும் சோதனையான காலகட்டங்களில் முதல்வர், சபாநாயகர், அமைச்சர்களைவிட, சட்டப்படியான அதிகாரம் பெற்றவர் கொறடாதான். இதுபோன்ற சமயங்களில் ஒரு மாநில ஆளுநர் எப்படிச் செயல்படவேண்டுமென்று 31.07.2016ஆம் நாள் வழங்கிய தனது தீர்ப்பில் உச்சநீதிமன்றம் சில வழிவகைகளை வகுத்து ஆளுநரின் செயல்பாட்டுக்கு உதவுகிறது. அதனடிப்படையில், சட்டமன்றங்களில் ஆளும் கட்சியின் தனிபெரும்பான்மையில் சிக்கல்கள் வந்து, அவர்களுக்குள் இரு பிரிவுகளாகப் பிரிந்து ஆட்சியமைக்க உரிமை கோரும்போது மாநில ஆளுநர், எந்தப் பிரிவினர் தனக்கு பெரும்பான்மை எண்ணிக்கையிலான உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகக் கோரி, அந்தக் கட்சியின் உறுப்பினர்களின் பட்டியலை அளிக்கிறாரோ, அவர் கொடுக்கும் பட்டியல்படி பெரும்பான்மை எண்ணிக்கை இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்டு, அந்தப் பிரிவினரை காலம் கடத்தாமல், எதற்கும் காத்திருக்காமல் அரசியலமைப்பு மாண்பை காக்கும்வகையில், குதிரை பேரம் போன்றவை நடைபெறுவதற்கு முட்டுக்கட்டை போடும்வகையில் அழைத்து, முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து உடனடியாக நாள் குறித்து தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்க ஆணையிட வேண்டும். ஆகவே, நம் ஆளுநர் சட்டப்படி செயல்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதுதானே!

அதாவது, பத்திரிகைகளில் வெளியான இந்திய ஒன்றிய தலைமை அரசு வழக்கறிஞரான திரு.முகுல் ரோத்கி, சட்ட கருத்துருவான இரு தரப்பினரையும் சபையில் தனது பலத்தை நிரூபிக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது, சட்டத்துக்கு எதிரானது என்பதை உணர்ந்து, பழனிச்சாமியை மட்டும் தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்கச் சொல்லிய கவர்னரின் செயல் சட்டப்படி சரியானது என்பதால், இதையும் பாராட்டலாம்.

ஆளுநர் நேற்று காலையில் பழனிச்சாமியை அழைத்துப் பேசி, மாலையிலேயே அவரையும், அவரது அமைச்சரவையையும் பதவிப் பிரமாணம் செய்து 15 நாட்களுக்குள் தனது தனிப்பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லியிருப்பது பற்றி பல்வேறு கருத்துகள் அரசியல் கட்சித் தலைவர்களிடையே உலவுகிறதே?

சரியாக முப்பது ஆண்டுகளுக்குமுன், 1987ஆம் ஆண்டு, எம்.ஜி.ஆர். இறந்ததால் அதிமுக சட்டமன்ற கட்சி உடைந்தது. ஜானகி, தனது பெரும்பான்மையை நிரூபிப்பதாகக் கோரினார். அதை ஆளுநர் குரானா, ஏற்று அவருக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து, 15 நாட்கள் அவகாசத்துக்குள், தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்க உத்தரவிட்டார். அப்போது ஜானகியும் அவர் அணியினரும் 14ஆவது நாள்தான் சட்டமன்றத்தைக் கூட்டி, வாக்கெடுப்பு நடத்தினர். ஜானகி தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்று தெரிந்ததாலும், அதேநேரம் சட்டசபையில் ஜெயலலிதா அணியினரால் ஏற்படுத்தப்பட்ட களேபரத்தாலும், ஜானகி தனது முதல்வர் பதவி மற்றும் அமைச்சரவையை கலைக்கும்படி ஆளுநரை கேட்டுக்கொண்டதால் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்தது.

இப்போது ஜெயலலிதா இறந்து, அக்கட்சியின் தற்போதைய பொதுச்செயலாளர் சசிகலா ஜெயலலிதாவுடனான (A1) கூட்டு குற்றவாளி என உச்சநீதிமன்றத்தால், 14.02.2017ஆம் நாள் தீர்ப்பளிக்கப்பட்டு அவர், தற்சமயம் சிறையில் இருக்கும் நிலையில், அதிமுக சட்டமன்ற கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்வராகப் பதவியேற்றுள்ள பழனிச்சாமி 15 நாட்களுக்குள் தனது கட்சியின் தனிப் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய நிலையில், சமயோசிதமாக, நாளையே அதாவது, பதவியேற்று இரண்டாம் நாளே, சட்டமன்றத்தைக் கூட்டி, தனது தனிப்பெரும்பான்மையை நிரூபிக்கத் தீர்மானித்திருக்கிறார்.

தற்சமயம் சட்டபேரவையில், அதிமுக, திமுக, காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையாலும் , கட்சி தடைதாவல் சட்டத்தின் அடிப்படையாலும் என்ன நடைபெறலாம்?

(மாலை 7 மணி பதிப்பில் பார்ப்போம்.)

வெள்ளி, 17 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon