மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 17 பிப் 2017

கூவத்தூரில் முதல்வர் ஆலோசனை!

கூவத்தூரில் முதல்வர் ஆலோசனை!

சசிகலா ஆதரவு எம்.எல். ஏக்கள்இன்னும் கூவத்தூர் விடுதியில் தங்கி இருக்கும்நிலையில் அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயற்சி செய்தும் அது பலன் அளிக்கவில்லை.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க கவர்னர் நேற்று அழைப்பு விடுத்தார். பின்னர் எடப்பாடி தலைமையிலான ஆட்சி 15 நாட்களுக்குள் தங்களது பலத்தை சட்ட சபையில் நிரூபிக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து நேற்று மாலையில் கவர்னர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க அமைச்சர்கள் மற்றும் கூவத்தூரில் தங்கி இருந்த அனைத்து எம்.எல்.ஏக்களும் கார்,ஆம்னி பஸ்களில் வந்தனர். கவர்னர் பதவிப் பிரமாணம் செய்த பிறகு அனைத்து எம்.எல்.ஏக்களும் மீண்டும் கூவத்தூர் விடுதிக்கு சென்றனர். நேற்று இரவு முதல் அங்கு ஒன்றாக தங்கி இருக்கிறார்கள். 10 நாட்கள் பரபரப்பு நேற்றுடன் முடிந்து விடும் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

சட்டசபையில் நாளை பெரும்பான்மை நிரூபிக்க எடப்பாடித் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இதனால் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மீண்டும் தங்களது பலத்தை நிரூபிக்க திட்ட மிட்டுள்ளனர். அதற்காகவே கூவத்தூர் விடுதியில் நாளை வரை அவர்கள் தங்கி இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கூவத்தூர் விடுதியில் உள்ள எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களை சந்திக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு சென்று ஆலோசனை நடத்தினார். நாளை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எப்படி வாக்களிக்க வேண்டும், என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆதரவு எம்.எல்.ஏக்களின் ஓட்டுகள் அனைத்தும் கிடைக்கும் வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

பெரும்பான்மையை நிரூபிக்கும் பொறுப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருப்பதால் அவர் இன்று இரவு கூட கூவத்தூர் விடுதியில் எம்.எல்.ஏக்களுடன் தங்கி இருப்பார் என்று தெரிகிறது.

வெள்ளி, 17 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon