மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 17 பிப் 2017

எதிர்ப்பா? வெளிநடப்பா? எம்.எல்.ஏ.,க்களுடன் ஸ்டாலின்

 எதிர்ப்பா? வெளிநடப்பா?  எம்.எல்.ஏ.,க்களுடன் ஸ்டாலின்

திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று, கட்சி கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த 15/02/2017 அன்று திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதற்கு மறுப்புத் தெரிவித்தார். இந்நிலையில், நாளை சட்டசபையில் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு, இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.. கூட்டம் நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு சட்டசபை நாளை கூடவிருக்கும்நிலையில், சட்டசபையில் திமுக-வின் நிலைப்பாடு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது திமுக எம்.எல்.ஏ.,க்களின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

ஏற்கனவே, திமுக-வின் ஆதரவு யாருக்கும் இல்லை என்று, திமுக செயல் தலைவர் ஸ்டாலினும், திமுக பொதுச் செயலாளர் அன்பழகனும் அறிவித்துவிட்டனர்.

இந்நிலையில், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக, எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்கலாமா அல்லது நம்பிக்கை வாக்கெடுப்புக் கூட்டத்தை புறக்கணிக்கலாமா என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் திருநாவுக்கரசர் தொடர்ந்து சசிகலாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துவருவதால், நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் திமுக எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும், அதன்மூலம் காங்கிரஸின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள முடியும் என்று திமுக-வின் ஒரு தரப்பினர் இன்று நடைபெறவுள்ள எம்.எல்.ஏ., கூட்டத்தில் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, எம். ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக இரு அணியாக பிளவுபட்டபோது இதேபோன்ற சூழ்நிலைதான் ஏற்பட்டது. அப்போது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் யாருக்கும் ஆதரவளிக்காமல் திமுக அன்று நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 17 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon