மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 17 பிப் 2017

நூலகர் பணியிடங்கள் : உயர்நீதிமன்றம் உத்தரவு!

நூலகர் பணியிடங்கள் : உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள நூலகர் பணியிடங்களை 4 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம்ம் வேடசந்தூரைச் சேர்ந்த ராஜசெல்வன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘கடந்த 2006ஆம் ஆண்டு, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் அனைத்து கிராமங்களிலும் நூலகம் அமைக்கப்பட்டது.

தற்போது இந்த நூலகங்கள் பராமரிக்கப்படாமல் உள்ளன. பெரும்பாலான இடங்களில் நூலகங்கள் ரேஷன் கடைகளாகவும், கிராம நிர்வாக அலுவலகங்களாகவும் இயங்கி வருகின்றன. இதனால் கிராமப்புற மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த நூலகங்களை பராமரிக்கவும், மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரவும் உத்தரவிட வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வுமுன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் கோவிந்தன், 'தமிழகத்தில் 2006ஆம் ஆண்டு, 12,522 நூலகங்கள் உருவாக்கப்பட்டன. அதில் 10,447 நூலகங்கள் பயன்பாட்டில் உள்ளன. 2,075 நூலகங்களில் நூலகர் பணியிடங்கள் காலியாக உள்ளன’ என வாதிட்டார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘தமிழகத்தில் காலியாக உள்ள 2,075 நூலகர் பணியிடங்களை 4 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

நூலகத்தைப் பராமரிக்கும் நூலகரின் பணி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பல நூலகங்களுக்கு ஆலோசகராகச் செயல்படும் வாய்ப்பு நூலகத் துறையில் உள்ளது. புத்தகங்களை பரிந்துரை செய்யவும், கிடைக்கும் இடத்தை முறையாகப் பயன்படுத்தவும் ஆலோசனை வழங்க முடியும். நூலக மேலாண்மை படிப்பை தேர்வுசெய்து படிப்பதன்மூலம், சிறந்த நூலகராகப் பணியாற்ற முடியும்.

வெள்ளி, 17 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon