மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜன 2017

டிஜிட்டல் திண்ணை:அமைச்சரவையில் மாற்றம்! - சசிகலாவின் புதிய திட்டம்!

டிஜிட்டல் திண்ணை:அமைச்சரவையில் மாற்றம்! - சசிகலாவின் புதிய திட்டம்!

மொபைலில் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ் அப் அனுப்பியிருந்த மெசேஜ் வந்து விழுந்தது. “எந்த இடையூறுகளோ, சிக்கலோ இல்லாமல் பதவியேற்க வேண்டும் என்ற டென்ஷனில் இருக்கிறார் சசிகலா. பதவியேற்கும்போதே அமைச்சரவையில் தேவையான மாற்றங்களைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற ஆலோசனையிலும் இறங்கியிருக்கிறார். முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை சபாநாயகராக நியமிக்கலாம் என்பதுதான் சசிகலாவின் திட்டம். காரணம், பன்னீரை டம்மியாக வைத்திருக்க சபாநாயகர் பதவிதான் சரியானதாக இருக்கும் என நினைக்கிறாராம். இது, பன்னீர் கவனத்துக்கும் போயிருக்கிறது. ஆனால் அவரோ, எந்த ரியாக்ஷனும் காட்டவில்லையாம். இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். பன்னீரை சபாநாயகராக ஆக்கிவிட்டால், அவரால் கட்சிப் பதவியிலும் நீடிக்க முடியாது. அதையும் அவரிடமிருந்து பிடுங்கிவிடலாம். ஆக, ‘இருப்பாரு... ஆனா இருக்க மாட்டாரு’ என்ற நிலைக்கு பன்னீர் தள்ளப்பட்டுவிடுவார். இதுதான் சசிகலாவின் திட்டம் என்கிறார்கள்.

சபாநாயகராக பன்னீர்செல்வத்தை நியமித்தால், தற்போது சபாநாயகராக இருக்கும் தனபாலை என்ன செய்வது என்ற கேள்வி வந்தது. தனபாலுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க முடிவு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

அடுத்து, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை மீண்டும் அமைச்சரவைக்குள் கொண்டுவரப் போகிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிருப்தியாக இருந்தவர்களில் செங்கோட்டையனும் ஒருவர். அவரைப் பேசி சமாதானப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அதனால், செங்கோட்டையனுக்கு வேளாண்மைத் துறை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. செங்கோட்டையனுக்கு பொதுப்பணித் துறை வழங்கலாம் என்றுதான் முன்பு பேச்சு ஓடியது. ஆனால் பொதுப்பணித் துறையை தற்போது வகிக்கும் எடப்பாடி பழனிசாமியோ சசிகலாவுக்கு நெருக்கமான வட்டத்தில் இருக்கிறார். பழனிசாமியிடமிருந்து எந்தப் பொறுப்பையும் மாற்ற வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறார். அதனால், செங்கோட்டையனுக்கு வேளாண்மைத் துறை ஒதுக்கலாம்.

அதேபோல, தற்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருப்பவர் கரூர் விஜயபாஸ்கர். அந்த துறையை அவரிடமிருந்து மாற்றி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வழங்க திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். விஜயபாஸ்கருக்கு கரூர் மாவட்ட கழகச் செயலாளர் என்ற கட்சிப் பொறுப்பை மட்டும் கொடுக்க முடிவெடுத்திருக்கிறார்கள். ஒருவருக்கு ஒரு பதவி என்பது ஏற்கனவே சசிகலா முடிவெடுத்ததுதான். அதை இந்த இடத்தில் அமல்படுத்தப்போகிறார். இப்படியாக, யாரை எந்த அமைச்சராக்கலாம்... யாருக்கு என்ன பொறுப்பு கொடுக்கலாம் என முடிவெடுத்துவிட்டார் சசிகலா. அவர் பதவியேற்பில் இந்த அதிரடிகள் எல்லாம் இருக்கும் என்கிறார்கள் கார்டன் வட்டாரத்தில்” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

(செந்தில் பாலாஜி)

அந்த மெசேஜை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக். தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றையும் அப்டேட் செய்தது.

‘‘ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. தீபாவை பார்ப்பதற்காக நாள்தோறும் ஏராளமான அதிமுக-வினர் தி.நகரில் உள்ள அவரது வீட்டில் குவிந்து வருகின்றனர். தீபா வீட்டுக்கு வெளியே இரண்டுபேர் உட்கார வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், தீபா வீட்டுக்கு வருபவர்களிடம் பெயர், முகவரி, போன் நம்பர் ஆகியவற்றை ஒரு நோட்டில் எழுதி வாங்கிக் கொள்கிறார்கள். இதையெல்லாம் உளவுத்துறை போலீசார் உன்னிப்பாக கவனித்து உடனுக்குடன் கார்டனுக்கும் தகவல் சொல்லிவருகிறார்கள். அப்படி அதிருப்தியில் இருப்பவர்களை சமாதானப்படுத்தும் பொறுப்பு அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. மாவட்டச் செயலாளர்களோ அந்தப் பொறுப்பை, அவர்களுக்குக் கீழேயுள்ள ஒன்றிய, கிளைச் செயலாளர்களிடம் கொடுக்கிறார்கள். அவர்களும் அந்த வேலைகளை செய்து முடித்துவிடுகிறார்கள். ஆனால் ஒன்றிய, கிளைச் செயலாளர்களிடம் சில புலம்பல்களையும் கேட்க முடிகிறது. ‘சமாதானப்படுத்த சொல்றங்க. ஆனால் செலவுக்கு பணம் கேட்டால் பத்து ரூபாய்கூட கொடுக்கிறதில்ல. அவங்களுக்கு மட்டும் கார்டனிலிருந்து பொங்கல் செலவுக்கு பணம் கொடுத்திருக்காங்க. எங்களுக்கு எதையும் செய்யாமல் சமாதானப்படுத்தச் சொன்னால் என்ன செய்வது?’ எனக் கேட்கிறார்கள். நல்ல கேள்விதான்!” என்று முடிந்த ஸ்டேட்டஸ்க்கு லைக் போட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

புதன், 11 ஜன 2017

அடுத்ததுchevronRight icon