மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜன 2017

ஜல்லிக்கட்டு: முதல்வர் உறுதி நிறைவேறுமா?

ஜல்லிக்கட்டு: முதல்வர் உறுதி நிறைவேறுமா?

07-05-2014 அன்று உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. அதை அடுத்து வந்த இரண்டு ஆண்டுகளும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. கடந்த இரு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறாத போதிலும் இதில் பெரிய அளவில் எதிர்ப்புகளோ கவன ஈர்ப்புகளோ இல்லை. மிகச்சிறிய அளவில் எதிர்ப்புகள் இருந்த நிலையில்,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பெரியகுளத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகியிருக்கிறார்.

இப்போது மன்னார்குடியைச் சார்ந்த சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆகியிருக்கும் நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இல்லாத வகையில் இப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதர்வாக பல போராட்டங்கள் பெரிய அளவில் வெடித்திருக்கின்றன.

ஜல்லிக்கட்டு விளையாட்டை பிரதானமாக விளையாடும் பகுதியைச் சார்ந்த பன்னீர்செல்வம் முதல்வராகியிருப்பதாலும், சசிகலா பொதுச்செயலாளர் ஆகியிருப்பதாலும் இயல்பாகவே ஜல்லிக்கட்டை நடத்தியே ஆக வேண்டும் என்ற மன எழுச்சி காணப்படுகிறது.

ஆனால் பாஜக கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுப்போம் என்று வாக்குறுதி அளித்தது. அவ்வப்போது பாஜகவின் தமிழக தலைவர்களும் இதையே கூறி வந்தனர். ஆனால் இப்போது விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் தலையிட முடியாது என கைவிரித்து விட்டனர். ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. எம்.பிக்கள் பிரதமரை சந்திக்கமுடியாமல் அவரது அலுவலகத்தில் மனுக்கொடுத்து திரும்பியிருக்கும் நிலையில்,இன்று முதல்வர் பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில்,

“ தமிழகத்தில் நடத்தப்படுவதற்கு ஏதுவாக மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டுமென நான் பிரதமருக்கு 9.1.2017 அன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன். இது பற்றி மத்திய அரசிடமிருந்து எந்தவித பதிலும் இதுவரை பெறப்படவில்லை.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவேண்டுமென்று வலியுறுத்தி பல அமைப்புகளும் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றன. மேலும் பல அரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால்,நானும்,தமிழக அரசும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம். இதில் எள்ளளவும் பின்வாங்கமாட்டோம். தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை கட்டிக் காப்போம் என்பதை தமிழக மக்களுக்கு உறுதிபடதெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று சிலர் நீதிமன்றத்தை நாடிய போதே கடந்த திமுக அரசு ‘ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச் சட்டம் -2009’ –யைக் கொண்டு வந்தது. ஆனால் 2014 மே, 17-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டை தடை செய்து தீர்ப்பளித்த காரணத்தால் திமுக அரசு இயற்றிய சட்டம் செல்லாத நிலைக்குச் சென்றது.ஆனால் நீதிமன்றத்தில் வெல்வதற்கு முன்னால் மிக முக்கியமாக அப்போதைய காங்கிரஸ் அரசின் சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் காளையை 1966-ல் இயற்றப்பட்ட விலங்குவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் விலங்குகளை காட்சிப் பொருளாக்கி துன்புறுத்தல் என்னும் பட்டியலில் சேர்த்தார். அதன் பின்னர்தான் ஜல்லிக்கட்டுக்கு தடை நீடித்தது. திமுக காட்டிய எதிர்ப்பின் விளைவாக அந்தப் பட்டியலில் இருந்து காளையை நீக்குகிறோம் என்று நீதிமன்றத்தில் காங்கிரஸ் அரசு சொன்ன போது விலங்குகள் நல வாரியத்தை கலந்தாலோசிக்காமல் இப்படி மனுத் தாக்கல் செய்யக் கூடாது என அந்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பை உறுதி செய்தது.பின்னர் வந்த பாஜக நினைத்திருந்தால் விலங்கு நலவாரியத்தில் பேசி பட்டியலில் இருந்து காளைகளை நீக்கியிருக்க முடியும். யதார்த்தத்தில் விலங்குகளை காட்சிப் பொருளாக்கி வதைக்கும் பட்டியலில் இருந்து காளைகளை நீக்காமல் மத்திய, மாநில அரசுகள் எதுவாக இருந்தாலும் இந்த விவகாரத்தில் ஒன்றும் செய்ய முடியாது. எனும் நிலையில் தனிச்சட்டமும் இயற்ற முடியாது, அது உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகி விடும் எனும் நிலையில் ” ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம்” என்று சொல்லியிருக்கும் முதல்வர். எப்படி ஜல்லிக்கட்டை உறுதி செய்யப் போகிறார் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.

புதன், 11 ஜன 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon