மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜன 2017

சிம்பு பிரஸ் மீட் - அபத்தங்களும் ஆபத்துகளும்!

சிம்பு பிரஸ் மீட் - அபத்தங்களும் ஆபத்துகளும்!

சிம்பு பிரஸ் மீட் ஆரம்பித்ததிலிருந்தே தனித்தனியாக நடத்திய ஒரு கணக்கெடுப்பில், ‘நான் ஒரு நடிகன் என்பதை மறந்துவிடுங்கள்’ என்ற ஸ்டேட்மெண்ட் 5 முறையும், நான் நடிகன் என்ற ஸ்டேட்மெண்ட் 6 முறையும், ‘நான் இப்ப என்ன சொல்ல வர்றேன்னா’ என்பதை 8 முறையும் சொல்லியிருக்கிறார். ‘தேனே, மானே’ சேர்ப்பதுபோல் இவற்றை ஆங்காங்கே சேர்த்துக் கொள்ளலாம்.

பேட்டி தொடங்கிய முதல் 19வது நிமிடத்தில் ஜல்லிக்கட்டு என்ற வார்த்தையைப் பேசியபோதுதான், இவர் ஜல்லிக்கட்டைப் பற்றி பேச வந்திருக்கிறார் என்ற விஷயமே புரிந்தது. அதுவரையிலும், தமிழின் மீது அவர் கொண்ட பாசத்தைப் பற்றி கூறினார். டி.ராஜேந்தர், ‘தமிழைப் படி’ என சிம்புவிடம் சொன்னது முதல், 5ஆம் வகுப்பு வரை சிம்பு தமிழ்ப் பாடத்தில் 100 மதிப்பெண்கள் எடுத்தது என தனது வரலாற்றைச் சொன்னவர், மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராடிய இளைஞர்கள் தாக்கப்பட்டதுதான் இந்த பிரஸ்மீட்டுக்கான காரணம் என்பதைச் சொன்னார். அதன்பிறகு, மயிலை தேசியப் பறவையாக அறிவித்தவர்கள், தமிழை ஏன் தேசிய மொழியாக அறிவிக்கவில்லை என்ற கேள்வியை முன்வைத்தார்.

மத்திய அரசை மட்டுமல்ல, மாநில அரசையும் சிம்பு விட்டுவைக்கவில்லை. அந்தப்பக்கம் அடிச்சான். இந்தப்பக்கம் அடிச்சான். இப்ப வீட்லயும் அடிக்கிறான். தமிழன் எங்கதான்யா போறது? நாங்க அனாதையா? என்று ஒரு சாத்து சாத்தினார். அடுத்து திடீரென எனக்கு போலிஸ்மீது மிகுந்த மரியாதை இருக்கிறது எனத் தொடங்கியதும், அச்சம் என்பது மடமையடா படத்தைப் பற்றி பேசப் போகிறார், என எதிர்பார்க்கப்பட அவர் பேசவில்லை. அமெரிக்க போலீஸால் தனக்கு நேர்ந்த ஒரு சங்கடத்தை சொல்லத் தொடங்கி பாதியிலேயே விட்டுவிட்டார். போலீஸ் உங்க கடமையைத்தான் செஞ்சீங்க. ஆனா, அந்தக் கடமையை செய்யணும்னு என்ன அவசியம்? ஒருநாள் யூனிஃபார்மை கழட்டி வீட்ல போடுங்க என திடீரென போலீஸின்மீதும் பாய்ந்தார்.

இவ்வளவு சிக்கல்களுடன் சென்ற பிரஸ் மீட்டில், சிம்பு மெயினாக விடாமல் பிடித்தது விஷால் மற்றும் ஆர்யா ஆகிய இருவரைத்தான்.

ஆர்யாவின் What is JALLIKATTU? சர்ச்சை

கத்தி சண்டைப் படத்தின்போது விஷால் ஜல்லிக்கட்டு பற்றி பேசாமல் தவிர்த்தபோது, ஆர்யா What is JALLIKATTU? என்று கேள்விகேட்டு சிக்கலில் மாட்டியதுதான் சிம்புவின் முழுப்பேச்சினுடைய சாராம்சம். PETA சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் மாடுகளை கொடுமைப்படுத்துகிறார்கள் என்று விஷால் சொன்ன ஸ்டேட்மெண்ட். ஆர்யா கேட்ட What is JALLIKATTU? ஆகியவற்றை திரும்பத்திரும்ப குறிப்பிட்டுப் பேசினார். காஃபி டே போன்ற ஷாப்களில் உட்கார்ந்து குடிக்கும் காஃபிக்களில் கலக்கப்படும் பால் மாடுகளைக் கட்டி, காம்பில் கரக்கப்படும் பாலில் காஃபி குடிப்பது தவறில்லையா? அப்படிப் பார்த்தால், நீங்கள் சாப்பிடும் தாவரங்கள்கூட உயிருள்ளவைதான். அவற்றைத்தானே கொன்று சாப்பிடுகிறீர்கள் என்று சிம்பு கேட்டது ஹைலைட்.

ஆனால் குறிப்பிடத்தக்க விஷயங்கள் சில இருக்கின்றன. முதல் விஷயம், அரசு அதிகாரிகளுக்கு கட்டளைகளைக் கொடுக்கும் ஆட்சியாளர்களைக் குறிப்பிடாமல் அரசு அதிகாரிகளின் கடமையைச் செய்யவேண்டாம் என்று சொன்னது. இரண்டாவது, மத்த ஸ்டேட்டுக்குப் போனா அடிக்கிறான்னு ஏன் நினைக்குற? அவனுக்கு உணர்வு இருக்கு. ஆனா உனக்கு இல்லைன்னு நினைக்கணும் என்று சொன்னது. இதன்மூலம், மற்ற மாநிலத்தவர்களை அடிக்கச் சொல்கிறாரா சிம்பு? என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் இப்போதே உருவாகிவிட்டன. அடுத்து, விஷால் - ஆர்யா பிரச்னைகளை இதற்குள் கொண்டுவந்தது. இந்த மாதிரி பிரச்னைகள் வரக்கூடாது என்பதால்தான் இளைஞர்கள் எவ்வித அரசியல் சாயலும் இல்லாமல், தங்களது போராட்டத்தை மக்கள் எழுச்சியாக முன்நின்று நடத்தினார்கள். ஜல்லிக்கட்டைப் பற்றி தெரிஞ்சிக்க அம்மா-அப்பாகிட்ட கேளுங்க. முதல்ல தமிழ்னா என்னன்னு கேட்டுத் தெரிஞ்சிக்கோங்க. வீட்ல தாத்தா-பாட்டி இருக்காங்களா? இல்லையே, நீதான் தாத்தா பாட்டியை அம்மா-அப்பாகிட்ட இருந்து பிரிச்சவனாச்சே என்றெல்லாம் மற்றவர்களது தனிப்பட்ட வாழ்க்கைகளை பொதுப் பிரச்னைகளுக்குள் கொண்டுவந்துவிட்டார்.

நாளை மாலை 5 மணிக்கு சிம்பு வீட்டுக்குமுன்பு 10 நிமிட மௌனப் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருக்கிறார். உலகமெங்கும் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டங்கள் வேஸ்ட் என்று பேட்டியின் ஆரம்பத்தில் சொன்ன சிம்பு, கடைசியில் மௌனப் போராட்டத்துக்கு அழைத்திருப்பது முரண். உண்ணாவிரதப் போராட்டமாக இருந்தாலும், தங்களது கோரிக்கைகளையும் கண்டனங்களையும் பதிவு செய்வது அந்தப் போராட்டங்களின் வழிமுறை. ஆனால் 10 நிமிட மௌனப் போராட்டம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என்பது கேள்விக்குறி. நாளைக்கு போராட்டத்துல வந்து அட்றா பாப்போம், தொட்றா பாப்போம் என்று போலீஸைத்தான் அழைக்கிறார்.

புதன், 11 ஜன 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon