மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜன 2017

ஜல்லிக்கட்டு: போலீஸ் நடத்திய தடியடி!

ஜல்லிக்கட்டு: போலீஸ் நடத்திய தடியடி!

ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி மாணவர்களும் இளைஞர்களும் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு அனுமதி கேட்டும், தடை விதிக்கக்கோரி வழக்குத் தொடர்ந்த ‘பீட்டா’ அமைப்பை எதிர்த்தும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, சென்னையில் தொடங்கிய போராட்டம், தற்போது அனைத்து நகரங்களிலும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திருச்சி மாவட்ட அனைத்து கல்லூரி மாணவர்கள் மற்றும் தேசிய மாணவர் பாதுகாப்பு குழு சார்பில் திருச்சி வெஸ்ட்ரி ரவுண்டானா அருகே இன்று காளைகளுடன் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவர்களில் ஏராளமானோர் காளை மாடுகளுடன் ஒன்று திரண்டு பேரணி நடத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்றனர்.

இந்தப் போராட்டத்திற்கு காவல்துறையினர் விதித்த தடையை மீறி பேரணியாகச் சென்றதால், காவல்துறையினருக்கும் மாணவர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

அதையும் மீறி, போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை அடைந்ததும் அங்கு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபோன்று, கரூர் 80அடி சாலையில் இளைஞர்களும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு இன்று, மாலை 4 மணி முதல் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் சுமார் 2500 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

இதுமட்டுமில்லமால், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நெல்லையில் முகநூல் நண்பர்கள் குழு போராட்டம் நடத்தினர். முகநூல் மூலம் திரண்ட இளைஞர்களும் மாணவர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். பாளையங்கோட்டை ஜோதிபுரம் மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மாலை 4 மணிமுதல் போராட்டம் நடைபெற்றது.

மதுரையிலும் அனைத்து கல்லூரி மாணவர்களும் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும்போது காவல் துறையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர்.

மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தொடர் தர்ணா போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் இன்று இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பின்னர், அங்கிருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது காவல்துறை தடுத்து நிறுத்தியதால் மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மதுரையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையை பலரும் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ’’தமிழக முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு என்ன நெருக்கடியோ தெரியவில்லை. “வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ” என்று ஜல்லிக்கட்டு தொடர்பாக ஒரு அறிக்கையை இன்று வெளியிட்டிருக்கிறார். அதுவும் ஜனவரி 3ஆம் தேதியன்று ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தலைமையேற்று நான் அலங்காநல்லூரில் ஆற்றிய உரைக்கு 8 நாட்கள் கழித்து பதிலறிக்கை கொடுத்திருக்கிறார். ஆனாலும் கூட முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவருக்கு ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்பான கோப்புகள் எல்லாம் கிடைத்திருக்கும் என்பதால் அவருக்கு இது குறித்த விவரங்கள் முழுமையாக தெரிந்திருக்கும் என்ற நம்பிக்கையில் அந்த அறிக்கையைப் படித்தேன். ஆனால் படித்த பிறகு முதலமைச்சர், பதவி ஏற்றுக்கொண்ட புதிய பொதுச் செயலாளர் போல் இவருக்கும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் முழு உண்மைகள் தெரியவில்லையே என்று வேதனைப்படுகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் ஜல்லிக்கட்டு பாதுகாப்புடன் நடந்தது என்றும், அதிமுக ஆட்சியில் தான் ஜல்லிக்கட்டு முற்றிலும் தடைபட்டது என்றும் தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஒப்புக் கொண்டு ஏறக்குறைய இரண்டு வருடங்கள் கழித்து இப்போது தி.மு.க. மீது வீண் பழி சுமத்துகிறார்.

உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் திராவிட முன்னேற்றக் கழக அரசு முழு மனதோடு, தமிழர்களின் பாரம்பரியத்தைக் காக்க வேண்டும் என்ற நோக்கோடு செயல்பட்டு, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான உத்தரவுகளைப் பெற்றது என்பதும், தமிழர் உணர்வு பற்றியோ, பண்பாடு பற்றியோ கவலைப்படாத அதிமுக அரசு நீதிமன்றங்களில் முறையாக வாதிடாமல் கோட்டை விட்டது என்பதும் ஜல்லிக்கட்டிற்காக போராடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு நன்றாகவே தெரியும். அதிமுக இந்த விளையாட்டை நடத்த மனப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு பல உதாரணங்களை எடுத்துக் கூற முடியும்.

ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு உரிய வாய்ப்புகள் கழக அரசு கொண்டு வந்த சட்டம் மூலமும், உச்சநீதிமன்றமே கொடுத்த அனுமதி மூலமும் இருந்தது என்றாலும் அதை தமிழர்களின் வீர விளையாட்டு தானே என்று அலட்சியத்தில் பொறுப்பற்ற முறையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொண்டு ஜல்லிக்கட்டு தடை வருவதற்கு முழு முதல் காரணமாக இருந்தது அதிமுக அரசுதான்!

மத்தியில் அமைந்துள்ள பா.ஜ.க. அரசுக்கு கடிதங்கள் எழுதியதையும், கோரிக்கை மனுக்கள் அனுப்பியதையும் ஏதோ அதிமுகவின் “சாதனை” போல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் முதலமைச்சர் பன்னீர்செல்வம். நான் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்று தான். திராவிட முன்னேற்றக் கழகத்தால் உயர்நீதிமன்றத்தில் சாதகமான ஆணை பெற முடிந்தது. உச்சநீதிமன்றத்தில் முறைப்படி வாதாடி தமிழக மக்களின் வீர விளையாட்டை நடத்திக் காட்டியது கழக ஆட்சி. அன்றைக்கு மத்தியில் ஆட்சியிலிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிற்கு அழுத்தம் கொடுத்து “காளைகளை அறிவிக்கையிலிருந்து நீக்கிக் கொள்ளத் தயார்” என்று அபிடவிட்டே தாக்கல் செய்தது. ஜல்லிக்கட்டு நெறிமுறை சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக நடத்திக் காட்டியது. ஆனால் இன்று வரை ஜல்லிக்கட்டை நடத்த முடியாமல் இருக்கும் அதிமுக அரசு, “ஜல்லிக்கட்டை நடத்த விடமாட்டோம்” என்று அநியாயமாக வாதிட்டுக் கொண்டிருக்கும் “பீட்டா” அமைப்புக்கு உதவும் நோக்கில் தான் இப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறதோ என்ற நியாயமான கேள்வி எனக்கு மட்டுல்ல - இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லட்சோபலட்சம் இளைஞர்களுக்கும் இன்றைக்கு வந்திருக்கிறது!

இன்றைக்கு ஜல்லிக்கட்டை அனுமதிக்க வேண்டும் என்று தமிழகமெங்கும் போராடிய இளைஞர்கள் மீது காவல்துறையை வைத்து தடியடி நடத்தியிருக்கிறீர்களே! இந்த நடவடிக்கை “பீட்டா” அமைப்பின் தூண்டுதலினால் எடுக்கப்பட்ட நடவடிக்கையா? ஜல்லிக்கட்டு வேண்டும் என்று கோரிக்கை வைத்து குரல் கொடுப்பதற்கு கூட தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் உரிமை இல்லையா? மாணவர்களின் மீதான தடியடிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில், லாவணி பாடுவதை நிறுத்திவிட்டு வருகின்ற தை பொங்கல் தினத்திலாவது ஜல்லிக்கட்டு நடத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுங்கள் என்று முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

புதன், 11 ஜன 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon