மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜன 2017

பணமதிப்பிழப்பை தாமதமாகத் தெரிந்துகொண்ட மூதாட்டி தவிப்பு!

பணமதிப்பிழப்பை தாமதமாகத் தெரிந்துகொண்ட மூதாட்டி தவிப்பு!

பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை மிகத் தாமதமாக அறிந்துகொண்ட மூதாட்டி ஒருவர் தனது பணத்தை மாற்ற முடியாமல் தவித்து வருகிறார்.

பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8ஆம் தேதி நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ள டிசம்பர்-30 வரை காலக்கெடு அளிக்கப்பட்டது. டிசம்பர்-3௦ வரை வங்கியில் மாற்றிக் கொள்ள முடியாதவர்கள் மார்ச் இறுதி வரை ரிசர்வ் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருகிறது.

இந்நிலையில், கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே வரப்புழா என்னும் சிற்றூரில் தனியாக வசித்து வந்த சதி(75) என்னும் மூதாட்டிக்கு இந்த அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்புதான் தெரியவந்துள்ளது. இவர் செவிலியராக பணியாற்றி கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றுள்ளார். இவரது கணவர் மற்றும் மகளும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்கள். இந்நிலையில், தனியாக வாழ்ந்து வரும் அவருக்கு மோடி அறிவித்த இந்த அறிவிப்பு மிக தாமதமாக தெரிந்துள்ளது. அதாவது டிசம்பர்-3௦ தேதிக்கு பிறகு தெரிந்துள்ளது. ஒருநாள் காய்கறி கடைக்கு சென்றுள்ளார். அப்போது காய்கறிகளை வாங்கிவிட்டு தடை செய்யப்பட்ட ரூ.500 நோட்டை வியாபாரிடம் கொடுத்துள்ளார்.

இதை வாங்க மறுத்த வியாபாரி இந்த நோட்டு செல்லாது என்று கூறியுள்ளார். அதற்கு அவர், ’இது புது நோட்டுதான்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து, அந்த வியாபாரி, மோடி அறிவிப்பை விளக்கமாகக் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி, தான் ஓய்வூதியத் தொகையை பெறும் சேமிப்புக் கணக்கு இருக்கும் ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் வங்கிக்கிளைக்கு சென்று பழைய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துள்ளார். ஆனால், டிசம்பர்-31-ம் தேதிக்கு பிறகு சென்றதால் வங்கி அதிகாரிகள் பணத்தை மாற்ற முடியாது என்று கூறியுள்ளனர். இதனால் அவர் வங்கி வாசலிலேயே நின்று கூச்சலிட்டுள்ளார்.

இதுகுறித்து மூதாட்டியின் அக்கம்பக்கத்தினர் கூறுகையில்: அந்தப் பாட்டி எங்களிடம் பேசவே மாட்டார். இதுவரை இரண்டு அல்லது மூன்று முறைதான் பேசியிருப்பார். உணவு கொடுக்கச் சென்றாலும் வாங்க மறுத்துவிடுவார். அவர் வீட்டருகில் நிற்கவே விடமாட்டார். எப்போதும் வீடு மூடியே இருக்கும்.அவருக்கு மோடி அறிவிப்பு தெரிந்திருக்கும் என்றுதான் நினைத்தோம். அவர் இவ்வளவு தொகை கையில் வைத்திருப்பார் என்று தெரியாது என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில் அவரின் நிலைமை அறிந்து அந்த ஊர் பஞ்சாயத்து கமிட்டி ரிசர்வ் வங்கியை அணுகுவதற்கு உதவி செய்து வருகிறது. ஆனால் யாரையும் எளிதில் நம்பாத அவர் அந்த உதவியையும் வேண்டாம் என்று கூறியுள்ளார்.

ஆனால், 500 ரூபாயை பத்து எண்ணிக்கைக்கு மேல் வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதன், 11 ஜன 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon