மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜன 2017

பொங்கல் : கரும்பு விலை குறைவு!

பொங்கல் : கரும்பு விலை குறைவு!

பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி கரும்பின் விலை குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு கட்டு கரும்பின் விலை 200 ரூபாயாக உள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. பொங்கல் பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவது கரும்பு. கரும்பானது ஆலைக் கரும்பு மற்றும் பன்னீர் கரும்பு என இரு வகைப்படும். ஆலைக் கரும்பில் இருந்து வெல்லம், சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. பன்னீர் கரும்பு என்பது அனைவரும் விரும்பி சுவைக்கத்தக்கது. இந்தக் கரும்பே பொங்கல் திருநாளில் வழிபாட்டிற்கு வைக்கப்படும். அத்துடன், மஞ்சள், சர்க்கரைவள்ளி கிழங்கு உள்ளிட்டவற்றை சூரிய பகவானுக்கு படைப்பார்கள்.

இந்தக் கரும்பு பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்பே கடைகளில் விற்பனைக்காக வைக்கப்படும். சென்னை கோயம்பேடு சந்தையில் கரும்பு வரத்து அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 70 லாரிகளில் கரும்பு லோடு வந்துள்ளது. ஒரு கட்டு கரும்பின் விலை ரூ.200க்கு விற்கப்படுகிறது. மேலும், கரும்பு ஒன்றின் விலை 10 ரூபாயாக உள்ளது. இந்த பொங்கலில் கரும்பு விலை குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த ஆண்டு கரும்பு கட்டு ஒன்று ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டது. ஒரு கரும்பு ரூ.20 முதல் 30 வரை விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.

கோயம்பேடு சந்தைக்கு செத்தியதோப்பு, வடபாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து கரும்பு அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது. கரும்பைப் போலவே வாழைப்பழம், ஆப்பிள் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றின் விலையும் குறைந்துள்ளது. ஒரு தார் வாழைப்பழம் ரூ.250 முதல் ரூ.400 வரைக்கும் விற்பனையாகிறது. ஆப்பிள் 100 முதல் 140 ரூபாய் வரையிலும், எலுமிச்சை 60 முதல் 70 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

புதன், 11 ஜன 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon