மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜன 2017

சிறப்புக் கட்டுரை: பிரச்சனைகளுக்கு நடுவில் பொங்கல்!

சிறப்புக் கட்டுரை: பிரச்சனைகளுக்கு நடுவில் பொங்கல்!

பணமதிப்பிழப்பு, விவசாயிகள் உயிரிழப்பு, ஜல்லிக்கட்டுத் தடை என முப்பெரும் பிரச்சனைகளால் மக்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட முடியாமல் தவித்து வருகின்றனர்.

பணமதிப்பிழப்பு அறிவிப்பும் மக்களின் சிரமங்களும்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி பிரதமர் மோடி பழைய 5௦௦ மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து புதிய ரூ.2000 நோட்டை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் எதிரொலியாக பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் என 15௦க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த பணப்பிரச்சனையால் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அடுத்தடுத்த வந்த பண்டிகைகளை வழக்கம்போல் கொண்டாடமுடியாமல், பண்டிகை தினத்தன்றும் அன்றும் ஏடிஎம் வாசலில் காத்துக்கிடந்தனர். இதில் பெரும்பாலான ஏடிஎம்கள் இயங்குவதே இல்லை. இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டால் வங்கியிலும் பண பற்றாக்குறை என்கிறார்கள். ’பொதுத்துறை வங்கிகளுக்குப் பணம் கொடுக்காமல், தனியார் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி பணம் கொடுக்கிறது’ என்று வங்கி அதிகாரிகளே புகார் தெரிவித்தும் பலனில்லை.

டிசம்பர்-3௦ ஆம் தேதி வரை வங்கியில் தங்களுடைய பணத்தை மாற்றமுடியாத மக்கள் மார்ச்-31வரை ரிசர்வ் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுதவிர 1௦ எண்ணிக்கைக்கு அதிகமாக செல்லாத ருபாய் நோட்டுகளை வைத்திருந்தால் ரூ.5௦ ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு மக்களை பயமுறுத்தியுள்ளது. இந்த நிமிடம் வரை, பணப்பிரச்சனை தீராமல், பண்டிகைக்குச் செலவழிக்கப் பணம் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

டிஜிட்டல் பரிவர்த்தனை

பிரதமர் மோடியின் கனவுத் திட்டம் ’டிஜிட்டல் இந்தியா’ திட்டம்.

மத்திய அரசு பண மதிப்பிழப்பு தொடர்பாக எந்தளவு நிபந்தனைகளை விதித்ததோ, அதேயளவு மக்களை டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு மாற ஊக்குவித்து வருகிறது. அதன் முதல்படியாக, டிஜிட்டல் பரிவர்த்தனையில் ஈடுபடுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், டிஜிட்டல் பரிவர்த்தனையில் ஈடுபட ஒவ்வொரு குடிமகனுக்கும் கல்வி அறிவு அவசியம். டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு பரிசு வழங்கினால் மக்களுக்கு கல்வி அறிவு வந்துவிடுமா? என இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வந்தாலும் மத்திய அரசு டிஜிட்டல் பரிவர்த்தனையை வலியுறுத்துவதால், கிராம மக்கள் கையிலிருக்கும் பணத்தை வைத்து என்ன செய்வது என்று கலங்கி நிற்கின்றனர். ஸ்வைப் மெஷினுக்குப் பழகாத, கல்வியறிவற்ற கிராம மக்கள், இன்னமும் நகரத்தின் கடைகளில் இருக்கும் ஸ்வைப் மெஷினில் டெபிட் கார்டைப் பயன்படுத்தத் தெரியாமல் திண்டாடி வருகின்றனர். ஆகையால், வங்கியில் பணமிருந்தாலும் தங்களுடைய தேவைக்கு அதை பயன்படுத்த முடியாமல் கவலையிலும் சிரமத்திலும் அச்சத்திலும் இருக்கின்றனர். இதில் தினக்கூலிகளாக இருக்கும் மக்களின் நிலை இன்னமும் மோசமாக உள்ளது.

விவசாயிகளின் தற்கொலை

தமிழகத்தில் விவசாயிகளின் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. கடந்த இரு மாதங்களில் தமிழகத்தில் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். இதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரி நதிநீர் பிரச்சனை குறித்தும் மத்திய அரசு தமிழகத்துக்கு சாதகமாக நடந்துகொள்ளவில்லை. கர்நாடக அரசும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அலட்சியப்படுத்து வருகிறது. இதனால், மொத்த டெல்டா மாவட்டங்களும் தண்ணீர் இல்லாமல் வறட்சியாக உள்ளது. 140 வருடங்களில் காணாத வறட்சி என்பதால் மக்கள் கவலையில் உள்ளனர். குறிப்பாக விவசாயிகள் தீராத துயரத்தில் உள்ளனர். மத்திய அரசு, பயிர் காப்பீடுத் தொகையை இப்போதைக்குத் தரப்போவதில்லை என்பதை உணர்ந்துள்ள விவசாயிகள் துயரில் வாடி வருகின்றனர். தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை விதை வாங்கிய செலவுக்கு கூட ஆகாது என்பதுதான் நிதர்சனம்.

ஜல்லிக்கட்டு

தமிழகத்தில் மரபுவழி விளையாட்டான ஜல்லிக்கட்டை கடந்த 2014-ஆம் ஆண்டு மத்திய அரசு தடைவிதித்தது. இதனால், கடந்த இரு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு விளையாட முடியாமல் காளையர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர். பொங்கல் என்றாலே முதலில் ஜல்லிக்கட்டுதான் நினைவுக்கு வரும். முக்கியமாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண்பதற்கு வெளி நாடுகளில் இருந்தும் மக்கள் வருவார்கள்.

ஜல்லிக்கட்டு விளையாடுவதற்கு ஒரு மாதம் முன்பாகவே மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறவேண்டும். காளைகளின் பிறப்புறுப்பில் மிளகாய்ப்பொடி தூவுதல், சேறு சகதிபூசி வெறியூட்டுதல் கூடாது.

காளையை ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு மேல் அடக்கக்கூடாது. காளைகளிடம் கருவிகளைக் கொண்டு துன்புறுத்துவதோ கூடாது.

போன்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன போன்ற பல்வேறு நிபந்தனைகள் உள்ள நிலையில் மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ளது.

எனவே, இதை.எதிர்த்து தமிழகத்தில் எதற்கும் ஒன்று திரளாத இளைஞர்கள் இதற்கு ஒன்றுக் கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, மதுரை, கரூர், நெல்லை, திருச்சி, சேலம், காரைக்குடி, கோவை, புதுச்சேரி, நாகை, உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இளைஞர்கள் முகநூல் மூலம் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரசும் இயற்கையும் எழுப்பிய பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்தாண்டு இது துயர்மிகு பொங்கலோ?

புதன், 11 ஜன 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon