மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜன 2017

புற்றுநோயைக் கட்டுப்படுத்த புதிய வழி - உலக சுகாதார நிறுவனம்!

புற்றுநோயைக் கட்டுப்படுத்த புதிய வழி - உலக சுகாதார நிறுவனம்!

புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களை, அந்த பழக்கத்திலிருந்து மீட்க அரசு, பல வழிமுறைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இப்போது, புதிய வழிமுறை ஒன்றை உலக சுகாதர நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

அதாவது, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான வரியை அதிகரித்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை புற்றுநோய் நோயாளிகளுக்கு பயன்படுத்தலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் மற்றும் அமெரிக்க தேசிய புற்றுநோய் நிறுவனம் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் புகையிலை பொருட்கள் மீதான வரியை உயர்த்தி, அதன்மூலம் அரசுக்குக் கிடைக்கின்ற வருமானத்தின் மூலம் புற்றுநோய் மற்றும் இதயநோய் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் மூலம், இந்த நோய்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைக்க முடியும்.

சிகரெட் ஒன்றுக்கு 0.80 டாலர் (ரூ.54.66 ) கலால் வரியை அதிகரிப்பதன் மூலம், உலகளவில் சிகரெட் மூலம் கலால் வருவாய், வருடத்திற்கு 47 சதவிகிதம் வரை அதிகரிக்கும். கடந்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் உலகளவில் கலால் வரி மூலம் 18 லட்சம் கோடி வருமானம் கிடைத்துள்ளது.

இந்தியாவில், 35 சதவிகித இளைஞர்கள் புகையிலைப் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், தினமும் 5,500 இளைஞர்கள் புதிதாக புகைப்பழக்கத்தைத் தொடங்குகின்றனர்.

புகையிலையை அதிகளவில் பயன்படுத்துவதால் ,தற்போது வரை ஆண்டு ஒன்றுக்கு 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். ஆனால், இந்த உயிரிழப்பு 2030 ஆம் ஆண்டில் 80 லட்சமாக அதிகரிக்கக் கூடும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், இந்தியாவில் சிகரெட்,பீடி விற்பனை அதிகரித்து செல்வதை தடுப்பதற்கு, சிகரெட் மீது, கூடுதல் வரி விதிப்பது நல்லது என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை 27.5 கோடியாக உள்ளது. மேலும், புகையிலை பயன்பாட்டினால் இந்தியாவில் மட்டும் வருடத்திற்கு 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.அதுமட்டுமில்லாமல், ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 25 லட்சம் பேர் புற்றுநோய் நோயாளியாக மாறுகின்றனர்.

இந்தியாவில் 53% ஆண்களும் 3% பெண்களும் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். வாய்ப் புற்றால் மட்டும், லட்சத்தில் 10 பேர் பாதிக்கப்படுகின்றனர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

புதன், 11 ஜன 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon