மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜன 2017

பொங்கலுக்கு வண்டலூர் பூங்கா திறப்பு இல்லை!

பொங்கலுக்கு வண்டலூர் பூங்கா திறப்பு இல்லை!

வண்டலூர் உயிரியல் பூங்க பொங்கலுக்குத் திறக்கப்படாது என்னும் அறிவிப்பு பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி சென்னை,காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை வர்தா புயல் தாக்கியது. இதில், ஏராளமானமரங்கள், மின்கம்பங்கள் விழுந்தன. பல நாட்கள் மின் இணைப்பு இல்லாமல் மக்கள் இருட்டில் இருந்தனர். மேலும், போக்குவரத்துகடுமையாக பாதிக்கப்பட்டது. அதேபோல், மரங்கள் நிறைந்து காணப்படும் வண்டலூர் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்காவிலும்ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால், இரண்டு பூங்காக்களும் மூடப்பட்டன. குறிப்பாக, வண்டலூர் பூங்கா திறக்கப்படும் தேதிகுறிப்பிடாமல் மூடப்பட்டது.

அதைத் தொடர்ந்து, புயலால் பாதிப்படைந்த பூங்காவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டு மரங்களை உடனே அகற்றும்படிஉத்தரவிட்டார். முதற்கட்ட பணிக்காக,ரூ.2 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு கடலூர், விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200 பேர் வரவழைக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, விலங்குகளை பாதுகாப்பாக அடைத்து விட்டு சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. முதலில் நடந்து செல்லும்பாதையில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டன. பாதிப்படைந்த விலங்குகளின் இருப்பிடங்கள் சரி செய்யப்பட்டு உள்ளது. ஆனால், சரிந்தஅனைத்து மரங்களும் இதுவரை முழுமையாக அகற்றப்படவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் பண்டிகையின்போது வண்டலூர் பூங்காவில் ஏராளமான மக்கள் கூடுவார்கள். அதற்கானமுன்னேற்பாடுகள் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பே செய்யப்படும்.

ஆனால், இந்த ஆண்டு வார்தா புயலால் பலத்த சேதமடைந்த பூங்காவை சீரமைக்கும் பணி இன்னும் முழுமையாக முடியவில்லை.ஆனால், மக்களின் பார்வைக்காக ஜனவரி 11 ஆம் தேதி பூங்காவைத் திறக்க திட்டமிட்டுள்ளதாக பூங்கா அதிகாரிகள் கடந்த மாதம்தெரிவித்திருந்தனர்.

காணும் பொங்கலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், பூங்கா திறக்கப்பட மாட்டாது என்னும் இந்த அறிவிப்பு மக்களிடையேஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வண்டலுர் உயிரியல் பூங்கா அதிகாரி ஒருவர் கூறுகையில், “சீரமைப்பு பணிகள் முழுமையாக முடியவில்லை. காணும்பொங்கலுக்கு பொதுமக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பொங்கல் பண்டிகைக்குவண்டலுர் பூங்கா திறக்கப்படாது. சீரமைப்பு பணிகள் முடிய இன்னும் 10 நாட்கள் ஆகும்’’ என தெரிவித்துள்ளார்.

வர்தா புயல் பாதிக்கப்பட்ட கிண்டி சிறுவர் பூங்கா சீரமைக்கப்பட்டு கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

காணும் பொங்கலன்று, சென்னை, சென்னை புறநகர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வண்டலூர் பூங்காவுக்கு வருவர். இந்த அறிவிப்பு அவர்களை பெருத்த ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 11 ஜன 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon