மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜன 2017

பொங்கல் போனஸ் அறிவிப்பு: அரசு ஊழியர்கள் நிம்மதி!

பொங்கல் போனஸ் அறிவிப்பு: அரசு ஊழியர்கள் நிம்மதி!

இந்த ஆண்டு போனஸ் இல்லா பொங்கலாக அமைந்து விடுமோ என்ற கவலையில் அரசு ஊழியர்கள் ஆழ்ந்திருந்த நிலையில், தமிழக அரசு தாமதமாக இன்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸை அறிவித்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழக்கமாக ஜனவரி மாதம் ஐந்தாம் தேதிக்குள் கிடைத்துவிடும். கடந்த ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஜனவரி மாதம் 2-ஆம் தேதி பொங்கல் போனஸை அறிவித்து, 3-ஆம் தேதி பணத்தை வழங்கினார்.

2017-ஆம் ஆண்டும் பொங்கல் போனஸ் வரும் என்ற எதிர்பார்பில் இருந்தார்கள் அரசு ஊழியர்கள். ஆனால் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் 2016 டிசம்பர் 5 -ஆம் தேதி காலமானார். தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள பன்னீர்செல்வத்தால் எந்த முடிவும் தைரியமாக எடுக்க முடியவில்லை, நிதி சம்பந்தப்பட்ட கோப்புகளில் கையெழுத்து போடமுடியாமல் தவிப்பதால், அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போன்ஸ் அறிவிக்கமுடியாத சூழல் உருவாகியுள்ளது.இதனால் அரசு ஊழியர்கள் எரிச்சலில் இருந்தார்கள். இந்த அதிருப்தி தொடர்பாக நம்மிடம் பேசிய அரசு ஊழியர் சங்க, கடலூர் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் “தமிழகத்தில் பென்ஷன் வாங்குபவர், காவல் துறையினர் உட்பட அரசு ஊழியர்கள் 18 லட்சம்பேர் இருக்கிறார்கள், கடந்த ஆண்டு பொங்கல் போனஸாக ஆயிரம் முதல் மூவாயிரம் வரையில் ஜனவரி மாதம் 5-ஆம் தேதிக்குள் கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு இன்றோடு 11-நாட்கள் ஆகி விட்ட நிலையில் இதுவரை பொங்கல் போனஸ் அறிவிக்கப்படவில்லை.இனிமேல் அறிவிப்பார்களா என்பதும் தெரியவில்லை.

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக 7 ஆயிரம் வழங்கி, அரியர்ஸ் பணமும் கூடுதலாக வழங்கியது, அதே போல் தமிழக அரசு பொங்கல் போனஸ் 7 அயிரம் வழங்கவேண்டும், அரியர்ஸ் வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறோம், ஆனால் வழக்கமாக கொடுக்கும் போனஸே வழங்காமல் இருக்கிறார்களே, என்னதான் நிர்வாகம் நடக்கிறதோ தெரியவில்லை” என்று கவலையை வெளிப்படுத்தினார்.

வழக்கமாக பொங்கல் திருநாள் வரும் ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் போனஸ் அறிவித்து விடும் நிலையில் தாமதமாக இரண்டாவது வாரத்தில் பொங்கல் போனஸை அறிவித்துள்ளது பன்னீர் செல்வம் தலைமையிலான அரசு. வழக்கமாக இந்த போனஸ் வரம்பினுள் வராத காவல்துறையினருக்கும் இந்த ஆண்டு போனஸ் அறிவித்துள்ளது தமிழக அரசு. அரசு விரும்பும் போது அவர்களாக பார்த்து காவல்துறைக்கு போனஸ் போடுவார்கள். சில ஆண்டுகள் போடாமல் இருந்தார்கள். இந்த ஆண்டு காவல்துறையினருக்கு போனஸ் கொடுத்துள்ளதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புதன், 11 ஜன 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon